மழைத்துளி – மழைத்துளியின் வடிவம்

Posted by

மழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா ?

அதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம்.மழைத்துளி வடிவம்

தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும்.

பொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்தால் அப்பாத்திரத்தின் உட்பரப்பில் பரவிவிடும். ஆனால், எவ்விதப் பிடிப்புமின்றி அந்தரத்தில் விழும்பொழுது இவ்விசையின் காரணமாக மூலக்கூறுகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, அந்நீரின் கனஅளவிற்கு (Volume) ஏற்ற விகிதத்தில் குறைந்த அளவு புறப்பரப்புள்ள (Surface area) ஓர் உருவமாக மாற முயற்சிக்கும், அவ்வுருவே கோளவடிவம் (Sphere).

இனி, காண்பதற்கு கவித்துவமாக கண்ணீர்த்துளி போல் வரையப்படும் மழைத்துளியின் வடிவமானது உண்மையில் அப்படி இருப்பதில்லை.

மழைத்துளியானது மேலிருந்து கீழே விழும்பொழுது, அத்துளி நீரின் புறப்பரப்பு இழுவிசைக்கும் (Surface Tension), விழும் வேகத்தில் அத்துளியின் மீது செயல்படும் காற்றின் எதிர் விசைக்கும் (Pushing up Air’s pressure) இடையே நீயா-நானா ஒரு இழுபறி யுத்தம் நிகழும்.

1 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்பொழுது, துளிநீரின் புறப்பரப்பு இழுவிசையே வென்று அத்துளி கோளவடிவையே பெறும்.

அதற்கு மேல் சற்றுப் பெரிதாக இருப்பின், துளி விழும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அடிப்பகுதியில் ஏற்படும் காற்றின் அழுத்தம் வென்று அத்துளியானது சற்றுத் தட்டையாக மாறிப் பின் இன்னும் சற்றுப் பெரிதாக இருப்பின், Burger Bun போன்றதொரு வடிவை எடுக்கும்.

4 அல்லது 4.5 மில்லிமீட்டருக்கும் அதிகமாகத் துளி இருப்பின், காற்றின் அழுத்தம், அத்துளியினை பலூன் போல ஊதி சிறு சிறு துளிகளாக உடைத்துவிடும். மீண்டும் அச்சிறுதுளிகளின் அளவினைப் பொறுத்து அதனதன் உருவம் மாறும்.

சிறு குழந்தைகளுக்கு இப்பொழுது இந்த விளக்கத்தினைக் கூறவேண்டாம். அவர்கள் சிறிது காலம் கற்பனையிலும் கவித்துவத்திலும் திளைக்கட்டும். சற்றுச் சுயமாக சிந்திக்கும் திறன் வந்தவுடன் விளக்குவோம். ஏனெனில், சிறுவயதில் ஏற்படும் கற்பனை வளர்ச்சியே, பிற்காலத்தில் அவர்களின் சுயசிந்தனையாக வளரும். அன்றில், நாம் சொல்லிக்கொடுத்ததையே சொல்லும் கிளிப்பிள்ளைகளாகிவிடுவார்கள்.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/8ZBKk

நான் தேடோடி (The Seeker). இன்னதென்று இல்லாது எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறேன். கண்டடையும் எதுவும் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. இன்னும் இன்னும் எதுவோ இருக்கின்றது…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 − two =