விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது அண்டவெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். எமது பூமிக்கு அண்மையில் உள்ள விண்மீன் சூரியனாகும், இதுவே பூமிக்கு சக்தி வழங்கியாகத் திகழ்கின்றது.

விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள்ளன. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி.

சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புராக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

விண்மீன்கள் அவற்றின் நிறத்தை வைத்து, எடையை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு விண்மீன் தன ஆயுட்காலத்தில் பல்வேறுவகையான மாற்றங்களைப் பெறுகிறது, பிறப்பின் போது சிறியதாகவும் ஒரு வித நிறமுடையதாகவும், இறப்பின் போது பெரியதாகவும் வேறு ஒரு நிறம் பெற்றும் இறுதியில் அழிகிறது. எங்கள் சூரியனும் இதற்கு விதிவிலக்கல்ல.

பெரும்பாலான விண்மீகள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து நமது சூரியனிலும் ஆயிரம் மடங்குகள் பெரிதான, அதாவது 160 கோடி கிலோமீற்றர் விட்டமுள்ள விண்மீன்கள் வரை, அண்டவெளியில் உள்ளன. தங்கள் ஆற்றல் மூலங்களை முற்றாக இழந்தபின், சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி மிகச்சிறிய அளவினதாக மாறிவிடுகின்ற விண்மீன்கள் , வெண் குறுமீன்கள் (White Dwarf), நியூத்திரன் விண்மீன்கள், கருந்துளைகள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.

விண்மீன்களின் உருவாக்கம் (முழுமையான கட்டுரை:விண்மீன்களின் உருவாக்கம்)

அண்டவெளியில் பரவிக்கிடக்கும் தூசு முகில்கள் (தாதுப்பொருட்கள், மூலகங்கள் ), வாயுக்கள் முதலில் ஒன்று சேர்கின்றன, இவ்வமைப்புக்கள் திரளான முகில் போன்று இருப்பதுடன் தம்மகத்தே ஐதரசன், ஹீலியம் மற்றும் வாயுக்களைக் கொண்டுள்ளன, இந்த நிலை நெபுலம் அல்லது வான்புகையுரு (nebula) என அழைக்கப்படுகிறது. இவை ஈர்ப்புத்தன்மையால் படிப்படியாக சுருங்கி ஒன்று சேரும் போது நடுப்பகுதியில் ஒரு அடர்த்தியான திண்மம் உருவாகிறது, இதுவே முதல் மூல விண்மீன் (Protostar) ஆகும். இது மேன்மேலும் எடையில் கூடி வெப்பத்தையும் அதிகளவில் கொள்ளும்போது ஒரு விண்மீன் உருவாகிறது. இந்த விண்மீனைச் சூழவுள்ள தூசிகளில் இருந்து கோள்கள் உருவாகின்றன.

இவற்றின் எடையைப் பொறுத்தளவில் இவைகளுக்குரிய முடிவு வேறுபடும், எமது சூரியனின் எடையை மையமாக வைத்துக்கொண்டு விண்மீன்களை சூரியனிலும் சிறியது, சூரியன் அளவுக்கு ஒத்தது, சூரியனிலும் பெரியது என வகுக்கலாம்.

செங் குறுமீன் (red dwarf) : சூரியனிலும் சிறிய விண்மீன்கள், வெப்பம் குறைந்தளவு உருவாக்கப்படுபவை, நமது சூரியனின்  40% நிறையைக் கொண்டவை. இதன் சக்தியானது குறைவான வீதத்திலேயே உருவாக்கப்படுகின்றது. இவற்றில் ஐதரசனின் சேர்க்கையால் ஹீலியம் உருவாகுகின்றது. இவை வெளிவிடும் ஒளி சூரியனது ஒளியைவிட மிகவும் குறைந்தது (1/10,000).

வெண் குறுமீன் (white dwarf):சூரியனை ஒத்த எடையும் நம் பூமியைப் போல அளவில் உள்ளதுமான சிறிய விண்மீன்கள் இதனுள் அடங்கும், மீயொளிர் விண்மீன் வெடிப்புக்கு (supernova) உட்பட இயலாத அளவுக்கு எடை குறைவான எல்லா விண்மீன்களினதும் கடைசி நிலையாக இது கருதப்படுகிறது.

செம்பூதம் (red giant) : விண்மீன்களின் வாழ்க்கையில் கடைசி நிலை, விண்மீன்களின் எரிபொருளான ஐதரசன் முடிவடைந்து போகையில் இந்தப் பருவம் உருவாகத்தொடங்குகிறது.

சந்திரசேகர் வரையறை: ஒரு வெண் குறு விண்மீனின் அதிக பட்ச திணிவு (Mass) சந்திரசேகர் வரையறை எனப்படுகின்றது. இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார்.

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (super nova): நமது சூரியனை விட ஏறத்தாழ எட்டு மடங்குகள் அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதைக் குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் விண்மீன் திரள் (Galaxy) முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை. நமது சூரியன் மீயொளிர் விண்மீன் வெடிப்புக்கு உட்படாது.

கருங்குழிகள் (Black Hole):சூரியனை விடப் பலமடங்கு அதிகளவிலான விண்மீன்களின் பரிணாமத்தின் இறுதி, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளிஉட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவானஈர்ப்புச்சத்தியைக் கொண்டுள்ளது.

அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ (Black hole)மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.

அது சரி நம்ம சூரியனுக்கு என்ன நடக்கும்? பின்வரும் படத்தைப் பாருங்கள், சூரியனின் தற்போதைய நிலையும் எதிர்காலத்தில் ( சுமார் 7 பில்லியன் வருடத்தின் பிறகு) வரப்போகும் நிலையையும்..

இங்கே சூரியன் செம்பூதமாக (படத்தில் – சிவப்புப் பெருங்கோள்) மாறிப் பின்னர் சுருங்கி கோள நெபுல நிலையை அடைகிறது, அதன் பின்னர் சூரியன் வெண் குறுமீனாக காலத்தைத் தள்ளவேண்டியதுதான்.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/xvyhv

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

18 − fifteen =