ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம்

Posted by

விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும்.

இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது.

ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது அவை அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் இடவரைபடமோ அல்ல. இவ்விளக்க வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் அவற்றின் ஒளிரும் தன்மையை, நிறத்தை, வெப்பத்தைப் பொறுத்து தமக்குரிய இடத்தைக் கொண்டுள்ளன. எண்ணற்ற விண்மீன்கள் இருந்தாலும் மனிதர்களால் அறியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான விண்மீன்கள் இங்கே காட்டப்படுகின்றது. ஒரு புள்ளியின் அமைவிடம் எமக்கு இரண்டு காரணிகளை உணர்த்துகின்றன: விண்மீனின் ஒளிர்வளவு (அல்லது தனியப் பருமன்), வெப்பநிலை

இவ்விளக்க வரைபடத்தின் செங்குத்து அச்சு விண்மீனின் ஒளிர்வளவு (luminosity) அல்லது தனியப் பருமனைக் குறிக்கின்றது. வானியலில் ஒளிர்வளவு எனும்போது, ஒரு செக்கனில் விண்மீன் வெளிவிடும் ஆற்றலின் அளவைக் குறிப்பதாகும். புவியில் இருந்து நோக்கும்போது எல்லா விண்மீன்களும் ஒரே மாதிரியாக ஒளிர்வதில்லை, சில ஒளிர்வு கூடியனவாக, சில ஒளிர்வு குன்றியனவாக உள்ளன. {tooltip} தனியப் பருமன் {end-link} தனியப் பருமன்(Absolute magnitude ): ஒரு விண்மீனின் ஒளிர்வை அளக்கப் பயன்படும் அளவீடு; தோற்றப் பருமன் (Apparent magnitude) : புவியிலிருந்து ஒருவர் விண்மீனை நோக்கும் போது தெரியும் அதன் ஒளிர்வு. {end-tooltip} எனும் அளவீடு விண்மீனின் தனித்துவமான ஒளிர்வை அளக்கப்பயன்படுவதாகும். இரண்டு சந்தர்ப்பங்களிலும் அளவுகள் ஒரு குறிப்பிட்ட ஒளிர்வை (எமது கதிரவன் ஒளிர்வளவு = 1) வைத்தே விகிதங்களாகப் பெறப்படுகின்றன.

இவ்விளக்க வரைபடத்தின் கிடை அச்சு விண்மீனின் மேற்பரப்பு வெப்பத்தின் அளவு (கெல்வின்களில்) ஆகும். வரைபடத்தில் வெப்பநிலை கூடிய விண்மீன்கள் இடதுபக்கத்திலும் குளிர்வான விண்மீன்கள் வலது புறத்திலும் உள்ளன. விண்மீன்கள் வெப்பநிலையைப் பொறுத்து வெவ்வேறு நிறங்களை ஒளிர்வனவாக உள்ளன. ஒரு விண்மீனின் நிறமாலை வகுப்பு அதன் நிறமண்டலத்தின் வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடுகின்றது. சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. இவ்வகைப்பாடு O, B, A, F, G, K, M ஆகிய இலத்தீன் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இங்கு “O “ வெப்பம் மிகவும் கூடியது, “M” வெப்பம் குறைந்தது. “O” விலிருந்து “M” இற்குச் செல்கையில் வெப்பம் குறைந்து கொண்டு செல்கின்றது. (பார்க்க: விண்மீன் வகைப்பாடு)

விண்மீன் மோர்கன்-கீனன் வகைப்பாட்டில் ஒளிர்வளவை, விண்மீனின் ஆரையைப் பொறுத்து உரோமன் இலக்கத்தில் வகைப் படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் தமக்குரிய சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளன. மிகப்பெரியனவற்றை பூதம் (giant)  என்றும் சிறியனவற்றைக் குள்ளன் அல்லது குறுமீன் (dwarf) என்றும் குறிப்பிடுவதுண்டு.

 

ஒளிர்வளவைப் பொறுத்து பின்வருமாறு விண்மீன்கள் அழைக்கப்படுகின்றன:

 • 0 மிகைஒளிர் பூதம் hypergiants
 • I மீஒளிர் பூதம் supergiants
  • Ia-0
  • Ia
  • Iab
  • Ib
 • II ஒளிர் பூதம் bright giants
 • III இயல்பொளிர் பூதம் normal giants
  • IIIa,
  • IIIab
  • IIIb,
 • IV தாழ் ஒளிர் பூதம் subgiants
  • IVa
  • IVb
 • Vமுதன்மைத் தொடர் விண்மீன்கள் (குள்ளர்கள்)  main sequence stars (dwarfs)
  • Va,
  • Vab
  • Vb,
  • Vz“,
 • VI தாழ் குள்ளர்கள் subdwarfs.
 • VII வெண் குள்ளர்கள்  white dwarfs.

முதன்மைத் தொடர் விண்மீன்கள் (குள்ளர்கள்) பிரிவில் செங்குள்ளர், மஞ்சள் குள்ளர் போன்ற குறுவிண்மீன்கள் அமைந்துள்ளன.

சரி, வரைபடத்தில் இருந்து எதை அறிவது?

இடது மேற்பகுதியில் உள்ள விண்மீன் மிகவும் வெப்ப நிலை கூடியதாகவும் மிக்க ஒளிர்வு கூடியதாகவும் இருக்கும்; வலது மேற்பகுதியில் உள்ள விண்மீன் குளிர்வானதாக, ஆனால் மிக்க ஒளிர்வுடையதாக இருக்கும். இடது கீழ்ப் பகுதியில் உள்ள விண்மீன்கள் வெப்பம் கூடியன ஆனால் ஒளிர்வு குன்றியனவாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, எமது கதிரவன்:

ஒளிர்வளவு = 1 ; நிறமாலை = G (மஞ்சள்) ; மேற்பரப்பு வெப்பநிலை = 5300 – 6000 கெல்வின்கள்

 

 

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/VczCF

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

19 + 15 =