கிளீசு விண்மீன்கள் (Gliese Stars)

Posted by

புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்று செய்திகள் படிக்கின்றோம், அவை எங்கே அமைந்துள்ளன? அங்கு உயிரினம் உண்டா? எங்கள் பூமி போன்றே அவற்றின் அமைப்பு உள்ளதா என்பது பற்றிப் பார்க்கத் தொடங்கினால் மிகவும் சுவையான விடயமாக இருக்கும். நாம் வாழும் பூமி,

பூமிக்கு சக்தி வழங்கும் கதிரவன், சகோதரக் குடும்பங்கள் இவை யாவும் சேர்த்து சூரியக் குடும்பம் என்கின்றோம். நமது சூரியன் ஒரு வகை நட்சத்திரம் எனக் கருதுகையில் இந்த நட்சத்திரத்தைச் சூழ கிரகங்களும் விண் கற்களும் வலம் வருகின்றன. இதனைப் போல பல்வேறு நட்சத்திரங்கள் அண்டவெளியில் பரவிக் கிடக்கின்றது, அவற்றிற்கும் கிரகங்கள் உண்டு. நாம் இங்கு பார்க்கப்போவது ‘கிளீசு’ (Gliese) என அழைக்கப்படும் நட்சத்திரங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

1957 இல் ஜெர்மனிய நாட்டு வானியல் வல்லுனர் வில்கேல்ம் கிளீஸ் (21 சூன் 1915 – 12 சூன் 1993) என்பவர் நம் பூமிக்கு அண்மையில் உள்ள நட்சத்திரங்கள் பற்றிய பட்டியல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டார், 1969இல் இந்தத் தொகுப்பு மேலும் விரிவடைந்தது. இவரது பெயரால் மேற்கொண்டு கண்டுபிடிக்கப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் பெயரிடப்பட்டு வருகின்றது. சமீபத்தில் உயிரினம் வசிக்கக்கூடிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பெயர் கிளீஸ்581 ஜி.

உங்களுக்கு சோதிடத்தில் நம்பிக்கை உண்டோ இல்லையோ, சோதிடக் கணிப்பில் இராசி, நட்சத்திரங்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? மேற்கத்தேய இராசி கணிப்பீடுகளுக்கும் தமிழ் கணிப்பீடுகளுக்கும் மாற்றங்கள் உண்டு. உதாரணமாக தமிழில் ‘மீனராசி’ , மேற்கத்தேய முறைப்படி ‘கன்னிராசி’.

மொத்தமாக 27நட்சத்திரங்கள், அவற்றிற்கேற்ப வகைப்படுத்தப்பட்டு இருக்கும் 12 இராசிகள், எனத் தமிழில் இருக்கும் அதே சமயம் மேற்கத்தேய சோதிடத்திலும் 12 இராசிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த விபரங்கள் தேவை? சற்றுச் சிந்தித்தால் தென்படலாம். இது இவ்வாறிருக்க நாம் விண்மீன்கள் எனப்படும் நட்சத்திரங்கள் பற்றிப் பார்ப்போம்.

சில விண்மீன்கள் அடங்கிய ஒரு தொகுதியை உடுக்குவிள் (constellation ) என்பர். மீனராசியை எடுத்தால் அது மீனம் எனும் உடுக்குவிளில் இருந்தே உருவாக்கப்பட்டிருகிறது. தெளிவான வானத்தில் உடுக்குவிளை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். விண்மீன்களைப் புள்ளிகளாக்கி இணைக்கும் போது அவை ஒரு தோற்றம் பெறுகின்றன, மீனத்தைப் பொறுத்தவரையில் அவை மீன் வடிவில் அமைகின்றன.

மேற்கொண்டு வரும் பந்திகளில் உள்ள சில சொற்பதங்களை விளங்கிக்கொள்ள வேண்டியதன் நிமித்தம் அவற்றைப் பற்றி இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.

விண்மீன்கள்

விண்மீன்கள் அவற்றின் நிறத்தை வைத்து, எடையை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு விண்மீன் தன ஆயுட்காலத்தில் பல்வேறுவகையான மாற்றங்களைப் பெறுகிறது, பிறப்பின் போது சிறியதாகவும் ஒரு வித நிறமுடையதாகவும், இறப்பின் போது பெரியதாகவும் வேறு ஒரு நிறம் பெற்றும் இறுதியில் அழிகிறது. எங்கள் சூரியனும் இதற்கு விதிவிலக்கல்ல.

விண்மீன்களின் தோற்றம்

அண்டவெளியில் பரவிக்கிடக்கும் தூசு முகில்கள் (தாதுப்பொருட்கள், மூலகங்கள் ), வாயுக்கள் முதலில் ஒன்று சேர்கின்றன, இவ்வமைப்புக்கள் திரளான முகில் போன்று இருப்பதுடன் தம்மகத்தே ஐதரசன், ஹீலியம் மற்றும் வாயுக்களைக் கொண்டுள்ளன, இந்த நிலை நெபுலம் அல்லது வான்புகையுரு (nebula) என அழைக்கப்படுகிறது. இவை ஈர்ப்புத்தன்மையால் படிப்படியாக சுருங்கி ஒன்று சேரும் போது நடுப்பகுதியில் ஒரு அடர்த்தியான திண்மம் உருவாகிறது, இதுவே முதல் மூல விண்மீன் (Protostar) ஆகும். இது மென்மேலும் எடையில் கூடி வெப்பத்தையும் அதிகளவில் கொள்ளும்போது ஒரு விண்மீன் உருவாகிறது. இந்த விண்மீனைச் சூழவுள்ள தூசிகளில் இருந்து கோள்கள் உருவாகின்றன.

இவற்றின் எடையைப் பொறுத்தளவில் இவைகளுக்குரிய முடிவு வேறுபடும், எமது சூரியனின் எடையை மையமாக வைத்துக்கொண்டு விண்மீன்களை சூரியனிலும் சிறியது, சூரியன் அளவுக்கு ஒத்தது, சூரியனிலும் பெரியது என வகுக்கலாம்.

செங் குறுமீன் (red dwarf) : சூரியனிலும் சிறிய விண்மீன்கள், வெப்பம் குறைந்தளவு உருவாக்கப்படுபவை,

வெண் குறுமீன் (white dwarf): சூரியனை ஒத்த எடையும் நம் பூமியைப் போல அளவில் உள்ளதுமான சிறிய விண்மீன்கள் இதனுள் அடங்கும், மீயொளிர் விண்மீன் வெடிப்புக்கு (supernova) உட்பட இயலாத அளவுக்கு எடை குறைவான எல்லா விண்மீன்களினதும் கடைசி நிலையாக இது கருதப்படுகிறது.

செம்பூதம் (red giant) : விண்மீன்களின் வாழ்க்கையில் கடைசி நிலை, விண்மீன்களின் எரிபொருளான ஐதரசன் முடிவடைந்து போகையில் இந்தப் பருவம் உருவாகத்தொடங்குகிறது.

சந்திரசேகர் வரையறை:ஒரு இறந்துபட்ட விண்மீனின் அதிக பட்ச திணிவு(Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார்.

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (super nova): நமது சூரியனை விட ஏறத்தாழ எட்டு மடங்குகள் அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதைக் குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் விண்மீன் திரள் (Galaxy) முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை. நமது சூரியன் மீயொளிர் விண்மீன் வெடிப்புக்கு உட்படாது.

கருங்குழிகள் (Black Hole): சூரியனை விடப் பலமடங்கு அதிகளவிலான விண்மீன்களின் பரிணாமத்தின் இறுதி, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளிஉட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவானஈர்ப்புச்சத்தியைக் கொண்டுள்ளது.

அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ (Black hole) மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.

அது சரி நம்ம சூரியனுக்கு என்ன நடக்கும்? பின்வரும் படத்தைப் பாருங்கள், சூரியனின் தற்போதைய நிலையும் எதிர்காலத்தில் ( சுமார் 7 பில்லியன் வருடத்தின் பிறகு) வரப்போகும் நிலையையும்..

இங்கே சூரியன் செம்பூதமாக (படத்தில் – சிவப்புப் பெருங்கோள்) மாறிப் பின்னர் சுருங்கி கோள நெபுல நிலையை அடைகிறது, அதன் பின்னர் சூரியன் வெண் குறுமீனாக காலத்தைத் தள்ளவேண்டியதுதான்.

இவை யாவும் சில அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டிய விடயங்கள், இப்போது மீண்டும் கிளீஸ் விண்மீன்கள் மீது பார்வையைத் திருப்புவோம்.

ஏற்கனவே கிளீஸ் விண்மீன்கள் பட்டியல் என்றால் என்ன என்று பார்தோமல்லவா, இப்போது இதுவரை எத்தனை விண்மீன்கள் கிளீஸ் பட்டியலில் உள்ளன என்பதனை கீழே அவதானிக்கலாம்..

அண்மைய விண்மீன்களின் கிளீஸ் பட்டியல்

அடிக்கடி கவனத்தில் ஈர்க்கப்படும், பூமியில் இருந்து25 பாசெக்கு (parsecs) தூரத்தில் காணப்படும் புதிய விண்மீன்களின் பட்டியல் அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் (Gliese Catalogue of Nearby Stars) என அழைக்கப்படுகிறது.

 

முதற்பதிவும் பிற்சேர்க்கையும்

1957 இல் ஜெர்மனிய நாட்டுவானியல் வல்லுனர் வில்கேல்ம் கிளீசு (21 சூன் 1915 – 12 சூன் 1993) என்பவர் முதலாவது விண்மீன் பட்டியலை வெளியிட்டார், இதில் நம் பூமியிலிருந்து 20 பாசெக்குகள் தூரத்தில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் விண்மீன்கள் அடங்கிய விபரம் காணப்பட்டது.1969இல் இந்தத் தொகுப்பு மேலும் விரிவாக்கப்பட்டு விண்மீன்களுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 22 பாசெக்குகளாக நீட்டப்பட்டது. முதலாவது பட்டியலில் அடங்கும் நட்சத்திரங்கள் இவரது பெயரால் ‘கிளீசு’ என்றும் அதன் சுருக்கப்பெயர்கள் அவரது ஆங்கில முதல் இரண்டு எழுத்துக்களைத் தாங்கி ‘GL’ எனவும் அழைக்கப்பட்டு இந்தப்பெயர்களுக்குப் பின்னர் உரிய இலக்கங்களாக ஒன்றிலிருந்து 965வரை இடப்பட்டது, இதன் படி விண்மீன்களின் பெயரீடு ‘GLNNN’ ஆக அமைந்தது. மேலும் விரிவாக்கப்பட்ட பதிப்பில் விண்மீன்களது எண்ணிக்கை 1529 வரையில் பட்டியலாக்கப்பட்டத, இதிலிருந்து பெயரீடு ‘GlNNN.NA’ ஆகவும் இதற்குரிய இலக்கங்கள் 1.0 – 965.0 எனும் வகையில் தசம எண்களாகவும் வகுக்கப்பட்டு பட்டியலானது ஏறுவரிசையில் அமைக்கப்பட்டது.

1970இல் இந்தப் பட்டியலுக்குரிய பிற்சேர்க்கை இரிச்சார்ட்டு வான்டர் இரயெட் உவூலி மற்றும் அவரது சகாக்களால் வெளியிடப்பட்டது, இதில் தூரமானது 25பாசெக்குகளாக நீட்டப்பட்டது.

 

பின்னைய பதிப்புகள்

 

கிளீசு தனது பட்டியலின் இரண்டாவது பதிப்பினை 1979இல் ஹார்த்முட் ஜரெய்ப் என்பவருடன் இணைந்து வெளியிட்டார், பெயரீடானது ‘GJ’ (கிளீசு – ஜரெய்ப்) எனப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

மூன்றாவது பதிப்பு 1991இல் மீண்டும் இருவரினதும் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது, இதில் 3803 விண்மீன்களின் விபரங்கள் அடங்கி உள்ளன, இந்தப் பட்டியலே தற்போதும் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • கிளீஸ் 1
 • கிளீஸ் 16
 • கிளீஸ் 33
 • கிளீஸ் 67
 • கிளீஸ் 65
 • கிளீஸ் 75
 • கிளீஸ் 86
 • கிளீஸ் 105
 • கிளீஸ் 229
 • கிளீஸ் 250
 • கிளீஸ்436
  • கிளீஸ் 436 b, கிளீஸ் 436 விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்

oகிளீஸ் 436 c, கிளீஸ் 436 விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள், பூமியை விட ஐந்து மடங்கு பெரியது

 

 • கிளீஸ் 445
 • கிளீஸ் 541 – Arcturus
 • கிளீஸ் 542
 • கிளீஸ் 570
 • கிளீஸ் 581, செங் குறுமீன் ஒன்று, துலாம் (Libra) உடுக்குவிளில் அமைந்துள்ளது.
  • கிளீஸ் 581 b, கிளீஸ் 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
  • கிளீஸ் 581 c, கிளீஸ் 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
  • கிளீஸ் 581 d, கிளீஸ் 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
  • கிளீஸ் 581 e, கிளீஸ் 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
  • கிளீஸ் 581 g, கிளீஸ் 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
  • கிளீஸ் 581 f, கிளீஸ் 581 செங் குறு விண்மீனை வலம் வரும் புறச்சூரியக் கோள்
 • கிளீஸ் 623
 • கிளீஸ்651
  • கிளீஸ் 651 bகிளீஸ் 651 விண்மீனை வலம்வரும் புறச்சூரியக் கோள்
 • கிளீஸ் 667
 • கிளீஸ் 673
 • கிளீஸ் 710, Serpens Cauda உடுக்குவிளில் காணப்படும் விண்மீன்
 • கிளீஸ் 721 is Vega, மிகவும் பிரகாசமான விண்மீன்
 • GJ 725
 • கிளீஸ் 747AB
 • கிளீஸ்777
  • கிளீஸ் 777 Ab
  • கிளீஸ் 777 Ac
 • கிளீஸ் 783
 • கிளீஸ்876
  • கிளீஸ் 876 b
  • கிளீஸ் 876 c
  • கிளீஸ் 876 d
  • கிளீஸ் 876 e
 • கிளீஸ் 884
 • கிளீஸ் 892
 • கிளீஸ் 1214Ophiuchus உடுக்குவிளில் காணப்படும் விண்மீன்
  • GJ 1214 b, மிகைப் பூமி
 • கிளீஸ் 3021
The short URL of the present article is: https://www.thamilkalvi.com/InxQz

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

thirteen + twenty =