இலைசோசோம்

Posted by

பகுப்புடல்கள் அல்லது இலைசோசோம்கள் (Lysosome) விலங்கு உயிரணுக்களில் (மெயக்கருவுயிரிக் கலங்களில்) உள்ள நுண்ணுறுப்புகளில் ஒன்றாகும். தாவரங்களிலும் பூஞ்சைகளிலும் இலைசோசோம்கள் இல்லை என்று கருதப்படுகின்றது. எல்லா விலங்குக் கலங்களிலும் லைசோசோம் காணப்பட்டாலும் பாலூட்டிகளில் சிவப்பணுக்களில் இவை காணப்படுவதில்லை. தசைக் கலங்களிலும் இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. மேலணி மற்றும் சுரப்பிக் கலங்களில் இதன்  எண்ணிக்கை அதிகம்.

இவை உயிரணுக்களின் கழிவுப் பொருட்கள், தேவையிšலாத முதிர்ச்சியடைந்த நுண்ணுறுப்புகள், மேலதிகமான எண்ணிக்கையைக் கொண்ட நுண்ணுறுப்புகள், தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் போன்றவற்றைச் செரிக்கும் (அழிக்கும்) இன்றியமையாத வேலையைச் செய்கின்றன. இதற்காக நீராற்பகுப்பி (hydrolase) செரிமான நொதியங்களைக் கொண்டுள்ளது.இலைசோசோம்கள் ஒற்றை மென்சவ்வு உறையால் சூழப்பட்டுள்ள புடகங்கள் (குமிழிகள் – vesicle) ஆகும். உறையின் உட்புறத்தே லைசோசோமினுள் பல வலிமையான நொதிகள் காணப்படும். இவை இந்த உறையை விட்டு வெளியே கசியுமாயின் அது கலத்தையே அழித்து விடும். ஆகவே பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் கலத்துள் விழுங்கப்படும் போது தின்குழியங்கள் எனப்படும் அமைப்பினுள் அவை இருக்கும். அந்த தின்குழியங்களுடன் இலைசோசோம் சென்று இணைந்து இவ்விரண்டின் உறைகளும் இணையும். குழியவுருவில் பி.எச் 7.2 ஆக இருக்கின்றது, ஆனால் லைசோசோமினுள் பி.எச் பெறுமானம் 4.5 – 5 ஆகும். இந்த அமிலத்தன்மை செரிமானத்திற்கு உதவுகிறது.

இலைசோசோம் எனும் பெயர்  கிரேக்கச்சொறகளான lysis, தனித்தனியாகப் பகுத்தல், மற்றும் soma, உடல் என்பனவற்றில் இருந்து தோன்றியது..இவை தாமாகவே அழிவுறுவதால் தற்கொலைப் பைகள் எனும் பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றன. பெல்ஜிய நாட்டைச்சேர்ந்த கிறிஸ்டியான் டீ டிவே (Christian de Duve) எனும் குழியவியல் நிபுணரால் 1945இல் கண்டறியப்பட்டது.

இலைசோசோம் தேக்க நோய் (Lysosomal storage disease –LSD) எனும் மரபணு நோயில் இதன் செயல்பாட்டுத் திறன் குன்றிக் காணப்படும். நொதியங்கள் ஏதேனும் பற்றாக்குறையில் இருப்பதால் அல்லது இல்லாது போய் விடுவதால் இந்நோயில் தேவையற்ற பதார்த்தங்கள் உடலில் தேக்கமடைகின்றது.

இலைசோசோம்கள் புடகங்களாக கொல்கியுடலில் இருந்தோ அல்லது நேரடியாக அகக்கலவுருச் சிறுவலையில் இருந்தோ உருவாகின்றன. லைசோசோம்கள் உருண்டை வடிவம் உடையவை. இதனுள் அடர்த்தியான பொருள்கள் நிறைந்துள்ளன. லைசோசோம்களின் அமைப்பும், அடர்த்தியும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இவைகளின் அளவு 0.2 முதல் 5μm ஆகும். லைசோசோமில் காணப்படும் செரிமான நொதிகளின் எண்ணிக்கை நாற்பது வரை உள்ளது என ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

இதில் காணப்படும் முதன்மையான நொதிகள்:

  1. கொழுப்பைச் செரிக்கும் லைபேசு (lipase)
  2. காபோவைதரேட்டை (carbohydrate) செரிக்கும் நொதிகள்
  3. புரதத்தைச் செரிக்கும் புரோட்டியேசு (protease)
  4. உட்கரு அமிலங்களைச் செரிக்கும் நியுக்ளியேசு (nuclease)
  5. லைசோசைம் (lysozyme)

இலைசோம்களின் நொதியங்கள் கலத்தகச் சமிபாட்டிலும், கலப்புறச் சமிபாட்டிலும் பங்கு கொள்பவை. கலத்தகச் சமிபாட்டின் போது தின்குழியச் செயற்பாட்டின் மூலம் கலங்களுள் எடுக்கப்படும் பதார்த்தங்களைக் கொண்ட புடகங்களுள் இலைசோம்களின் நொதியங்கள் விடுவிக்கப்படும். நடுநிலை நாடிகள் ஒற்றைக் குழியங்கள், கூப்பரின் கலங்கள், அமீபா போன்ற தனிக்கல அங்கிகள் போன்றவற்றில் இது நடைபெறுகின்றது.

கலப்புறச் சமிபாட்டின்போது இலைசோம்களிற் காணப்படும் நொதியங்கள் கலத்துக்கப்புறமான ஊடகத்திலேயே செயற்படும். என்பாக்கத்தின் போது தொழிற்படும் என்புடைக்கும் கலங்கள், தவளையாக உருமாறும் நிலையில் உள்ள வாற்பேயின் (tadpole) வாலிலுள்ள கலங்கள் அழிக்கப்படுவதில் இவை உதவுகின்றது. இன்னுமொரு எடுத்துக்காட்டாக, மனித முளையத்தின் விருத்தியின் போது விரல்களிடையே சவ்வுகள் காணப்பட்டுப் பின்னர் மறைகின்றது. இதனை அழித்து விரல்களைத் தனித்தனியே சுயமாக உருவாக்குவதிலும் இலைசொசோம் துணைபோகின்றது.

ஒரு கலம் முதிர்ச்சியினால் இறந்து விடும் வேளையில் அவற்றில் உள்ள லைசோசோம்கள் உடைந்து அக்கலத்தை முழுமையாக சீரணித்து விடுகிறன. இச்செயலை தன்னையே கொல்லுதல் அல்லது ஓட்டோலைசிஸ் (autolysis) எனப்படும்.

இலைசோசோமின் செயற்பாடு:

ஒரு உயிரணுவின் கழிவகற்றும் தொகுதியாக விளங்கும் இலைசொசோம் சில பதார்த்தங்களைச் செரிமானம் அடைய வைக்கின்றது. பின்வரும் முறைகள் மூலம் இது நடைபெறுகின்றது:

  • தின்குழியமை முறைமூலம் இறக்கும் கலங்களை அல்லது நுண்கிருமிகளைச் செரிமானம் செய்தல்
  • அகக்குழியமை (endocytosis)
  • தன்குழியமை (autophagy)
The short URL of the present article is: https://www.thamilkalvi.com/DtjGg

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 × 5 =