ஜூம்லா (4) இற்றைப்படுத்தல், தமிழ் மொழி நிறுவுதல்

Posted by

ஜூம்லா இணையதளத்தை தமிழ் மொழியில் உருவாக்குவதே இப்பாடத்தொடரின் குறிக்கோள், எனவே ஆங்கிலத்தில் இருக்கும் ஜூம்லா இடைமுகத்தை தமிழ் மொழியில் நிறுவுதல் தேவையானது.

எப்பொழுதும் ஜூம்லா இற்றைப்படுத்தப்பட்டு இருத்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். இற்றைப்படுத்துவதால் சில புதிய விடயங்களும் சேர்க்கப்படுகின்றன.

இங்கு பார்க்கப்போகும் உதாரணத்துக்கு ஜூம்லா 2.5.9 நிறுவி இருத்தல் தேவையா

னது. உங்களது ஜூம்லா வெளியீடு 2.5.1 அல்லது 2.5.9க்கும் குறைவு எனின் அதனை 2.5.9க்கு (அல்லது தற்போதையது எது புதிதோ அதற்கு) இற்றைப்படுத்தல் மிக முக்கியமானது. இற்றைப்படுத்த முன்னர் உங்கள் தரவுத்தளத்தையும் பிரதான தளத்தையும் சேமிப்புப்பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.

இற்றைப்படுத்தல் மூன்று விதமாகச் செய்யலாம்:

  1. நிர்வாக மையத்தில் இருந்து தானாக இற்றைப்படுத்தல்: site —- control panel — இங்கு Checking Joomla update status எனும் தகவல் வந்து பின்னர் எந்த வெளியீட்டுக்கு இற்றைப்படுத்தவேண்டி உள்ளதோ அதனைக் காட்டும். அந்த வில்லைப்படத்தில் கிளிக் செய்து இற்றைப்படுத்தல் மையத்தை அணுகலாம். பின்னர் ‘Install the update’ஐச் சொடுக்கி இற்றைப்படுத்துங்கள்.
  2. கோப்பைத் தரவிறக்கம் செய்து கோப்பகத்தில் பிரதி செய்து இற்றைப்படுத்தல்:https://downloads.joomla.org/ எனும் இணையதளம் சென்று  ஜூம்லாவின் இற்றைய பதிப்பைத் தரவிறக்கம் செய்யுங்கள். அதனை உங்கள் ஜூம்லா இருக்கும் கோப்பகத்துள் பொதிநீக்கம் செய்து ஏற்கனவே உள்ள கோப்புகளுடன் மாற்றீடு செய்ய வேண்டும். winrar அல்லது 7zip பயன்படுத்தி அந்தப்பொதியை விரிவுசெய்யலாம்.  அதன்பின்னர் Extension Manager சென்று Databaseஐக் கிளிக் செய்யுங்கள். “Warning: Database is not up to date!” எனும் தகவல் தோன்றியிருக்கும். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட வழு, இதனைக் களைவதற்கு “fix” என்பதைச் சொடுக்குங்கள். இப்போது Extension Managerஇல் காணப்படும் “Purge Cache” பின்னர் ‘Discover’ ஆகியவற்றை அழுத்துங்கள். அங்கு வெறுமையாக இருந்தால் நன்று, இல்லையேல் அங்கு காணப்படும் ஒவ்வொன்றினதும் ‘சரிப்பெட்டியில்’ குறியிட்டு வலது புற மேல் மூலையில் (ஆரஞ்சு நிறத்தில்) உள்ள ‘install’ எனும் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3.  கோப்பைத் தரவிறக்கம் செய்து Extension Manager மூலம் இற்றைப்படுத்தல்

    Extension Manager என்பதுதான் ஜூம்லா எனும் வீட்டின் முக்கிய அறை. இங்கிருந்தே பல நிரல்கள், நிரல்கூறுகள், மொழிகள், நீட்சிகள் நிறுவ முடியும். Extension Manager: Install சென்றால் அங்கு Upload Package File என்றிருக்கும். அதில் உள்ள ‘browse’ ஐச் சொடுக்கி நீங்கள் தரவிறக்கிய Joomla கோப்பைத் தேர்ந்தெடுங்கள் பின்னர் upload & Install எனும் பொத்தானைச் சொடுக்கி இற்றைப்படுத்தலாம்.

தமிழ் மொழி நிறுவுதல்

ஜூம்லாவில் வேறொரு மொழி நிறுவும் போது அதை எங்கு நிறுவ உள்ளோம் என்பது முக்கியம். ஒன்று, கட்டுப்பாட்டுத் தளத்தில் அதை நிறுவலாம்; மற்றையது பிரதான இணையதளத்தில் நிறுவலாம்.

கட்டுப்பாட்டுத் தளத்தில் நிறுவினால் ஜூம்லா முகாமைத்துவம் முழுவதும் தமிழில் அமையும், எனினும் தேவையைப் பொறுத்து ஆங்கிலமா தமிழா என்று மாற்றி அமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் இருக்கின்றனர், அதில் ஒருவருக்கு தமிழ் பரிச்சயம் இல்லை எனின் குறிப்பிட நிர்வாகி தனது நிர்வாக சுயகுறிப்பில் ஆங்கிலத்துக்கு மாற்றி அமைக்கலாம்.

இதேபோல பிரதான தளத்திலும் செய்யமுடியும், அதாவது வருகை தரும் பயனர் ஆங்கிலமா தமிழா என்று தெரிவு செய்யலாம். ஆயினும் நாங்கள் இங்கே கருத்தில் கொள்ளப்போவது பிரதான தளத்தில் தமிழை நிறுவுவது எப்படி என்று.

நிர்வாகப் பட்டியில் ‘Extension’ஐச் சொடுக்கி பின்னர்  Language Managerக்குச் செல்லுங்கள். அங்கே,

Installed – Site : பிரதான இணையதளத்துக்குத் தேவையான மொழிகள் இங்கே காணப்படும். நீங்கள் புத்தம் புதிதாக ஜூம்லாவை நிறுவிய படியால் ஆங்கிலமொழி ஏற்கனவே நிறுவப்பட்டு இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்திலும் வேறுபாடுகள் உள்ளது அல்லவா? அதற்கேற்ப Language என்பதன் கீழ்  English (நாட்டின் பெயர்) என்று இருக்கும். எ.கா: English (United Kingdom). அடுத்த நிரலில் Language Tag-இல் மொழியின் ஈர்குறியீடும் நாட்டின் ஈர்குறியீடும் இணைந்து en-GB ஆக அமைந்திருக்கும். தமிழுக்கு ta-IN அல்லது ta-LK என்று இருக்கும்.

Installed – Administrator: இங்கும் மேற்கூறியவாறு அமைந்திருக்கும்.

Content: கட்டுரை உள்ளடக்கங்களுக்குரிய மொழி. இயல்பு நிலையில் ஆங்கிலம் இருக்கும்.

நிறுவும் முறை 1:  முதலில் தமிழ் மொழி இடைமுகத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். இதற்கு மாணிக்கம் (http://forum.joomla.org/viewtopic.php?f=162&t=695529) எனும் அன்பர் உருவாக்கிய இடைமுகத்தை http://joomlacode.org/gf/download/frsrelease/16631/72424/ta-IN_joomla_lang_full_2.5.1v1.zip இங்கிருந்து தரவிறக்கம் செய்யுங்கள். அதனை ஒரு கோப்பகத்தில் இட்ட பின்னர், மேலே குறிப்பிடப்பட மூன்றாவது முறை மூலமும் நிறுவலாம், நிறுவிய பிற்பாடு நிறுவி முடிந்ததற்குரிய தகவல் தோன்றும்.

மீண்டும் நிர்வாகப் பட்டியில் ‘Extension’ஐச் சொடுக்கி பின்னர்  Language Managerக்குச் செல்லுங்கள். அங்கே புதிதாக நிறுவிய தமிழைக் காணலாம். இப்போது அதனைத் தேர்வு செய்து ‘default’ ஆக மாற்றுங்கள். ‘Default Language Saved.’ எனும் தகவல் தோன்றும், மேலும் தமிழின் அருகே நட்சத்திரக் குறி ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இப்போது பிரதான தளத்தின் இடைமுகம் தமிழாக மாற்றப்பட்டுள்ளது.

இப்போது Installed – Administrator சென்று அதனையும் தமிழில் மாற்றுங்கள். இப்போது நிர்வாக மையம் உட்பட உங்கள் இணையத்தளம் அனைத்துமே தமிழில் மாறி இருக்கும். சில இடங்களில் மொழிபெயர்ப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லை, எனவே கலைச்சொல் மாற்றியமைக்கவேண்டும் எனின் அதை எவ்வாறு செய்வது என்பது வேறொரு பாடத்தில் காணலாம்.

ஏற்கனவே கூறியதன் பிரகாரம் தேவைக்கேற்ப மொழி இடைமுகத்தை உள்ளிருப்பைச் சொடுக்குவதன் மூலம் மாற்றி அமைக்கலாம்.

நிறுவும் முறை 2:  இலகுவான முறை, ஆனால் சிலவேளைகளில் இம்முறை செயன்முறைக்கு வர ஏற்கனவே ஒரு மொழியை மேற்கூறிய முறைப்படி நிறுவி இருக்கவேண்டும்.

நீங்கள் ஏற்கனவே நிறுவிய நிர்வாக மைய தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையாக இல்லாதபடியால் சில சொற்கள் “COM_LANGUAGES_INSTALL”  போன்று காணப்பட்டால், மீண்டும் நிர்வாக மொழியை ஆங்கிலமாக மாற்றுங்கள். இதன்படி Install languages பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கே (தமிழில் ‘பதுக்கு நினைவகத்தை அழிக்க’ என்று உள்ள)  ‘purge cache’ என்பதைச் சொடுக்குங்கள், பின்னர் “Find languages” பொத்தானைச் சொடுக்கவேண்டும். இப்போது பெரும்பாலான மொழிகள் தோன்றும், உருசியமா? சீனமா? வேறு எது தேவையோ அதனை நிறுவலாம்.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/258hk

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

19 + 5 =