சென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம்.
முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்:
இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க.
ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில் New Project என்பதைத் தெரிவு செய்க.
பின்னர் Visual Basic,
Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க.
கீழே உள்ள எழுதுபெட்டியில் உங்கள் புதிய மென்பொருளுக்கான AlarmClock எனும் பெயரை எழுதலாம்.
உங்கள் மென்பொருள் சேமிக்கும் இடத்தை உலாவித் தெரிவு செய்க.
இப்பொழுது உருவாகியிருக்கும் படிவத்தின் பெயரை Form1 என்பதில் இருந்து frmAlarmClock எனபதற்கு மாற்றுக. இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் படிவத்தின் பெயர் “(Name)” என்று காணப்படும். அதற்கு அருகாமையில் உள்ள Form1தான் frmAlarmClock ஆக மாற்றப்படவேண்டியது. மேலும் கீழே பண்புப்பெட்டியில் இன்னுமொரு Form1 காணப்படும். இதுவே மென்பொருள் படிவத்தின் தலைப்பாக விளங்கப்போவது. இதனைத் தமிழில் “எழுப்பொலிக் கடிகாரம்” என்று மாற்றுவோம்.
காலக்கணிப்பி
இப்பொழுது நாம் அறியவேண்டியது காலக்கணிப்பி (Timer) என்றால் என்ன என்பதைப் பற்றி. கருவிப்பெட்டியின் (toolbox) மேலே Timer என்று எழுதித் தேடுங்கள். கடிகாரத்தின் குறுஓவம் கொண்டுள்ள காலக்கணிப்பியைப் பிடித்து படிவத்துள் போடுங்கள். இப்பொழுது கீழே Timer1 தோன்றியிருப்பதைப் பார்க்கலாம்.
எமக்குத் தேவையான காலக்கணிப்பியின் பண்புகள்:
- பெயர்: Timer1 என்றிருப்பதை TimerClock என்று மாற்றுங்கள். எப்பொழுதும் பண்புப் பெயரை இவ்வாறு எளிதாகப் புரியும்படி மாற்றுவது நிரல் எழுதும் போது ஏற்படும் சில குளறுபாடுகளைத் தவிர்க்கும்.
- செயற்படுநிலை (Enabled): இது True அல்லது False என்று மாற்றக்கூடியது.
- இடைவெளி (Interval): இது இயல்பாக 100 என்று இருக்கும். இது மில்லி செக்கன்கள் அளவு ஆகும். இதனை 1000 ஆக மாற்றுங்கள். இப்பொழுது காலக் கணிப்பியின் நேர அளவு ஒரு செக்கன்கள் (ஆயிரம் மில்லி செக்கன்கள்) ஆகும்.
பெயரீட்ட உரை (label text)
கருவிப்பெட்டியில் இருந்து எமக்குத் தேவையான அடுத்த கருவி பெயரீட்ட உரை ஆகும். இது நாம் உருவாக்கும் மென்பொருளில் ஏதேனும் சுட்டி எழுதவேண்டி இருந்தால் அதற்கு உபயோகப்படும். எடுத்துக்காட்டாக, புகுபதிகைப் படிவம் ஒன்றில் “பெயர்:” என்று உரைப்பெட்டியின் முன்னால் எழுதப்படும் பெயரீட்டம்.
கருவிப்பெட்டியில் இருந்து (குறு ஓவம் A வடிவில் இருக்கும்) “label”-ஐத் தெரிவு செய்து படிவத்தில் இடுங்கள். “Label1” என்பதன் பெயரை “lblCurrentTime” என்று மாற்றுங்கள். இப் பெயரீட்ட உரையை நாம் கடிகாரமாக மாற்றப் போகின்றோம். பண்புப் பெட்டியில் உரையை (text) “00:00:00” என்று மாற்றுங்கள்.
கடிகாரம் தொனிப்பாகத் தெரியவேண்டுமல்லவா? இப்போது எழுத்தின் நிறம், அளவு, வடிவம் என்பனவற்றை மாற்றுவோம். பண்புப் பெட்டியில் Font அருகே சென்று Micorsoft Sans என்பதைக் கிளிக் செய்யுங்கள். பின்னர் அருகே தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள். நாம் இங்கு Verdana எனும் எழுத்துருவைத் தெரிவு செய்வோம். அதனது வடிவம் “bold”, அதனது அளவு 48. Font-இன் கீழே உள்ள forecolorஐ மாற்றுவதன் மூலம் உங்களுக்கு விரும்பிய நிறத்தைத் தெரிவு செய்யலாம்.
இப்போது “start” என்பதைச் சொடுக்கவும்.
இன்னும் மணிக்கூடு ஓடவில்லை. இன்னும் நாம் ஒரு நிரலும் எழுதவில்லை. இந்த மென்பொருளை எவராவது இயக்கும் போது நேரம் ஓடத்தொடங்க வேண்டும் அல்லவா? எனவே அதற்கேற்றவாறு நிரலை உருவாக்க வேண்டும். படிவத்தில் “எழுப்பொலிக் கடிகாரம்” என எழுதப்பட்ட பகுதியில் இருதடவை சொடுக்க, நிரல் எழுதும் பகுதி தோன்றும். இது குறிப்பிட்ட படிவம் தொடங்கும் போது இயங்கக்கூடிய நிரல்களைக் கொண்டுள்ள பகுதியாகும். இங்கு அவதானித்தால், “Private Sub frmAlarmClock_Load” என்று இருப்பதைக் காணலாம். இங்கு frmAlarmClock படிவத்தின் பெயர், Load அப்படிவம் ஆரம்பிக்கும் போது என்ன கட்டளைகளைப் பெறுகின்றது என்பதற்குரிய சுட்டுப் பெயர். இங்கே “Me.Close()” என்று எழுதினால் படிவம் ஆரம்பித்த உடனேயே மறைந்து விடும்.
எமக்கு இப்போது தேவையானவை…
- “00:00:00” எனும் எழுத்துகள் தற்போதைய நேரத்தைக் குறிக்க வேண்டும்.
- TimerClock எனும் எமது காலக்கணிப்பி இயங்க வேண்டும்.
- நேரம் தொடர்ச்சியாக ஓடவேண்டும்.
lblCurrentTime என்பது “00:00:00” எனும் எழுத்துகளைக் குறிக்கும் என்பது எமக்குத் தெரியும். frmAlarmClock_Load பகுதியில் தற்போதைய நேரத்தைக் கொண்டு வருவோம். அதற்கு,
Private Sub frmAlarmClock_Load(sender As Object, e As EventArgs) Handles MyBase.Load lblCurrentTime.Text = Date.Now.ToString("h:mm:ss tt") End Sub
என்று நிரல் எழுதியவுடன் மென்பொருளை இயக்கிப் பாருங்கள்.
இயங்காத கடிகாரம் தென்படும். ஆனால் எப்பொழுது மென்பொருள் இயக்கப்பட்டதோ அந்த நேரம் காட்சியளிக்கும். இப்போதுதான் காலக்கணிப்பியின் தொழிற்பாடு உங்களுக்குப் புரிய வாய்ப்புண்டு. மேற்குறிப்பிட்ட நிரலுடன்,
TimerClock.Start()
என்று எழுத வேண்டும். அனால் அது மட்டும் போதாது. TimerClock-இன் மேலே இருதடவை சொடுக்க, TimerClock_Tick எனும் நிரற் பகுதி தோன்றும். அங்கே மீண்டும் “ lblCurrentTime.Text = Date.Now.ToString(“h:mm:ss tt”)” எனும் நிரலை எழுதுங்கள்.
தற்போது உங்கள் நிரற் பகுதியில் பின்வருமாறு இருக்க வேண்டும்.
Public Class frmAlarmClock Private Sub frmAlarmClock_Load(sender As Object, e As EventArgs) Handles MyBase.Load lblCurrentTime.Text = Date.Now.ToString("h:mm:ss tt") TimerClock.Start() End Sub Private Sub TimerClock_Tick(sender As Object, e As EventArgs) Handles TimerClock.Tick lblCurrentTime.Text = Date.Now.ToString("h:mm:ss tt") End Sub End Class
இப்போது கடிகாரம் இயங்குகின்றது.. அடுத்த பகுதியில் எவ்வாறு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்குவது என்பதைப் பார்ப்போம்.