விசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 1

Posted by

விசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு:  Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம்.

இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் இருந்து நிரலாக்க மென்பொருளின் தற்போதைய இலவசப் பதிப்பைத் (Download Visual Studio Community) தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Download Latest Visual Studio Community : https://www.visualstudio.com/vs/community/

நிறுவும்போது உங்கள் பிரதான தேவை Visual Basic என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிறுவல் கேட்கும்போது Visual Basic என்று குறிப்பிடுங்கள். தரவிறக்கம் செய்து அதனை நிறுவிய பின்னர் உங்கள் மென்பொருளாக்கப் பயணத்தைத் துவங்கலாம்.

இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுவது Visual Studio Ultimate  2012 பதிப்பு எனினும் நிரல்மொழியும் பயன்படுத்தும் விதமும் Visual Studio 2012 Express உடன் ஒப்பிடுகையில் ஒரே விதமாக அமைந்திருக்கும். Visual Studio Ultimate  2012 பதிப்பில் பல வசதிகள் உள்ளது, ஆனால் அது இலவசமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் முதல் மென்பொருள்

உங்களது முதல் மென்பொருளை இந்தப் பயிற்சியின் இறுதியில் உருவாக்க முடியும். இப்பாடத் தொடரில் வெவ்வேறு வகுப்பில் கூறப்படவுள்ள ஒவ்வொரு படிமுறைகளையும் விளங்கிக்கொள்ளும்போது  Visual Studio 2012 இன் ஒவ்வொரு கூறுகளையும் அறியும் வாய்ப்பு உண்டாகும்.

முதலில் ஒரு “வணக்கம் தமிழா!” எனும் சிறிய மென்பொருளை உருவாக்குவோம்.

Windows Forms Application Project உருவாக்கல்

 

 • கோப்பு (File) பட்டியில்  New Project என்பதைத் தெரிவு செய்க.
 • பின்னர் Visual Basic,
 • Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க.
 • கீழே உள்ள எழுதுபெட்டியில் உங்கள் புதிய மென்பொருளுக்கான VanakkamThamila எனும் பெயரை எழுதலாம்.


இப்போது மேலேயுள்ள படத்தில் காட்டியது போன்று காட்சியளிப்பதை காணலாம். இங்கேதான் ஒரு மென்பொருளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளும் அடங்கியுள்ளன. நிரல் மொழியை எழுதுவதும் இங்கேதான்.

இப்போது சில தேவையான பகுதிகளைப் பார்ப்போம்; படத்தில் உள்ள எண்களுக்குரிய விளக்கம் கீழே தரப்படுகின்றது. இதை உங்கள் விசுவல் இசுடூடியோ மென்பொருளில் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

  1. கருவிப்பெட்டி (toolbox): இங்கே ஒரு மென்பொருளுக்குரிய கட்டுப்பாட்டுக் கருவிகள், அலங்காரக் கருவிகள் போன்றன உள்ளன. ஒரு பட்டனை இடவோ அல்லது படத்தை இடுவதற்கோ இந்தக் கருவிப்பெட்டியில் உள்ளவை தேவைப்படுகின்றன. கருவிப்பெட்டி எந்நேரமும் காட்சியளிக்க ஊசி போன்றிருக்கும் அமைப்பைச் சொடுக்கவேண்டும். ஒரு பட்டனை இடுவதற்கு கருவிப்பெட்டியில் உள்ள buttonஐச் சொடுக்கிய பின்னர் மௌசை அழுத்தியபடி மென்பொருளின் முகப்பில் கொண்டுவிடுங்கள். இப்போது button ஒன்று அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
  2. எண் இரண்டால் காட்டப்பட்டுள்ளதுதான் மென்பொருளின் தோற்றத்தை நிர்ணயிக்கும் சாளரம். புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருள் திட்டத்தில் ஒரு படிவம் (form) Form1.vb எனும் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும். மேலும் தேவையான படிவங்கள் உருவாக்கலாம். ஒவ்வொரு படிவத்துக்கும் தோற்றத்துக்கான தத்தல் (எ.கா: Form1.vb [design] ), நிரலாக்கத்துக்கான தத்தல் என (Form1.vb) என இரண்டு தத்தல்கள் அமைந்துள்ளது.  ஏற்கனவே நாம் உருவாக்கிய buttonஐத் தவிர வேறெதுவும் அற்ற நிலையில் இப்போது மென்பொருளின் சாளரம் இருப்பதை அவதானிக்கலாம். ஏதாவது ஒரு வெற்றுப் பகுதியில் மௌசின் வலது விசையை அழுத்தி “view code”  என்பதைச் சொடுக்குங்கள். நிரலாக்கத்துக்கான தத்தல் (Form1.vb) தோன்றியிருப்பதைக் காண்பீர்கள். இதனை எண் 6க்குரிய விளக்கத்தில் தொடருவோம். 
  3. படத்தில் மூன்றாவதாகக் காட்டப்பட்டுள்ளது மென்பொருளுக்குரிய கோப்புகள், படங்கள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் போன்றவற்றைக் காட்டும் தீர்வுலாவி (solution explorer) ஆகும். இங்கு புதிய படிவத்தைச் சேர்க்கலாம்; மென்பொருளை நிரலியக்கம் மற்றும் கட்டுமானம் செய்யலாம்; மென்பொருளுக்குரிய வேறு தகவல்களைச் சேர்க்கலாம். நாங்கள் ஏற்கனவே இட்ட VanakkamThamila பெயரின் கீழேயுள்ள MyProjectஐ இருதடவை சொடுக்குவதன்மூலம்  VanakkamThamila எனும் புதிய தத்தல் திறந்திருப்பதைப் பார்க்கலாம். இங்கு மென்பொருளின் பெயர், உருவாக்கியவரின் பெயர், மென்பொருளின் வெளியீட்டு வரிசை எண், மென்பொருளுக்குரிய குறுஓவம் (icon) போன்ற பல விடயங்களை மாற்றவோ புதிதாக இடவோ செய்யலாம். இங்குள்ள படிவங்களின் பெயரில் (Form1.vb) வலம் சொடுக்குவதன் மூலம் நிரலாக்கத்துக்கான தத்தல், தோற்றத்துக்கான தத்தல் போன்றவற்றை அணுகலாம். பல படிவங்கள் உள்ள போது Form1, Form2….. எனும் பெயர்கள் குழப்பத்தை விளைவிக்கலாம், எனவே ஒவ்வொரு படிவத்துக்கும் அதற்குரிய பெயரை இடுவது சிறந்தது. நாம் இப்போது Form1 படிவத்துக்குரிய பெயரை frmThamil என்று மாற்றுவோமா?பெயரிடும்போதும் ஒரு முறையைக் கையாளுவது நல்லது. இவை படிவங்கள் என்றபடியால் தொடக்க மூன்று எழுத்துகள் frm என்று சிறிய ஆங்கில எழுத்தில் இருக்க அடுத்துத் தொடங்கும் முதல் எழுத்தை பெரிய எழுத்திலும் மற்றையவை சரிய எழுத்திலும் இருக்கவிடுவது ஒரு இலகுத்தன்மையை ஏற்படுத்துகின்றது. இரு சொற்கள் உள்ளபோது பின்வருமாறு பெயரிடலாம்: frmThamilUlakam.நாம் இப்போது மாற்றிய பெயர் நிரலாக்கத்துக்கானது. ஆனால், மென்பொருளின் மேற்புறத் தலைப்பில் இன்னமும் Form1 என்றே இருப்பதைக் கவனித்தீர்களா? மேலும், நாம் உருவாக்கிய பட்டனில் உள்ள Button1 எனும் பெயரையும் மாற்றவிரும்புகின்றீர்களா? இவையெல்லாவற்றையும் பண்புப்பெட்டியில் (properties) இலகுவாக மாற்றலாம்.ஒவ்வொரு தத்தலிலும் அதன் பெயருக்கு அருகாமையில் “*” எனும் குறி உள்ளதைக் கவனித்து இருப்பீர்கள். நாம் இதுவரை செய்ததை இன்னும் சேமிக்கவில்லை என்பதையே அது காட்டுகின்றது. எனவே சேமிப்பு மெனுவைச் சொடுக்கிவிடுங்கள். எல்லாவற்றையும் சேமிக்கும் குறுஓவத்தைச் (Save All) சொடுக்குங்கள். இப்போது ஒரு சாளரம் திறக்கும். எங்கு உங்கள் கணினியில் சேமிக்கப் போகின்றீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். Create directory for Solution என்பது சரிசெய்தே இருக்கட்டும்.சிலவேளை அவை தானாகவே சேமிக்கப்படும்.
  4. பண்புப்பெட்டி (properties): ஒரு மென்பொருளில் அமைந்துள்ள ஒவ்வொரு பகுதி அமைப்புகளுக்கும் உரிய இயல்புகளை மாற்ற இங்கு செல்கின்றோம். ஏற்கனவே கூறியுள்ள Form1 எனும் பெயரை இங்கும் மாற்றலாம். சேமித்தபின்னர் frmThamil என்று அமைந்துள்ள படிவத்துக்குரிய பண்புப்பெட்டியில் (properties) பெயர் என்று “(name)” இருப்பதைக் கண்டு frmThamil எனும் பெயரை frmThamila என்று மாற்றுங்கள். மீண்டும் சேமியுங்கள். இப்போது பண்புப்பெட்டியில் Text எனும் பண்புக்குச் சென்றால் Form1 என்றிருப்பதைக் காணலாம். இதனைத் தமிழில் “வணக்கம் தமிழா!” என்று மாற்றுங்கள்; சேமியுங்கள். 
   இப்போது பட்டனைச் சொடுக்கி அதற்குரிய பண்புகளை மாற்ற முயற்சியுங்கள். buttonக்குரிய பண்புப்பெட்டியில் Text எனும் பண்புக்குச் சென்றால் Button1 என்று இருப்பதைக் காண்பீர்கள். இதனை இப்போது “வணக்கம்” என்று மாற்றுங்கள். மென்பொருள் முகப்பில் வணக்கம் எனும் பட்டனை படத்தில் காட்டப்பட்டுள்ள பகுதிக்கு நகர்த்துங்கள். இப்போது Button1 என்று பண்புப்பெட்டியில் உள்ள (name என்று எழுதப்பட்டுள்ள) பெயரை  மாற்றுவதன்மூலம் நிரலாக்கத்தில் பயன்படுத்தப் போகும் பெயரைத் தீர்மானிக்கின்றோம். இதனை buttonக்குரிய சுருக்கமான btn-ஐ முதலிலும் பின்னர் பட்டனின் பண்புக்குரிய பெயரையும் சேர்ப்பதன் மூலம் உருவாக்கலாம். அதன்படி, btnVanakkam என்று பெயரிடுவோம்.இப்போது மேலும் ஒரு பட்டனைச் சேருங்கள். அதற்குரிய நிரலாக்கப்பெயர் “btnClose” என்றும் தோற்றப் பெயர் “மூடு” என்றும் வையுங்கள்மேற்கொண்டு toolboxஇலிருந்து உரைப்பெட்டியை (TextBox) மென்பொருள் தோற்றப் படிவத்தின் மீது நகர்த்துங்கள். txtHello என்று அதற்குப் பெயர் சூடுங்கள், ஆனால் Text எனும் பண்பில் ஒன்றும் எழுதாது விடுங்கள். txtHello உரைப்பெட்டியை மென்பொருளின் இரு புற எல்லையையும் தொடுமாறு நீட்டுங்கள்.உரைப்பெட்டி மற்றும் இரு பட்டன்கள் ஆகியனவற்றை மேலே நகர்த்துங்கள். இப்போது மென்பொருளின் பிரதான சாளரத்தின் உயரம் 140, அகலம் 300 என்று அதன் பண்பில் மாற்றுங்கள். (அல்லது மௌசாலும் குறுக்கலாம்)இப்போது உங்கள் மென்பொருளின் தோற்றம் இவ்வாறு காட்சியளிக்கின்றதா?  இப்போது சேமியுங்கள். தீர்வுலாவியில் வலம் சொடுக்கி “build” என்பதை அழுத்துங்கள்.
  5. இப்போது கீழேயுள்ள பகுதியில் output என்பதில் கட்டுமானம் வெற்றிகரமாக நிறைவேறியது அல்லது வழு உள்ளது என்பது போன்ற தகவல்கள் தோன்றும்.—— Build started: Project: VanakkamThamila, Configuration: Debug Any CPU ——  VanakkamThamila -> C:\Users\MedPhoenix\Documents\Visual Studio 2012\Projects\VanakkamThamila\VanakkamThamila\bin\Debug\VanakkamThamila.exe========== Build: 1 succeeded, 0 failed, 0 up-to-date, 0 skipped ==========பின்னர் மேலே இருக்கும் “start” என்பதை அல்லது விசைப்பலகையில் உள்ள “F5”ஐ அழுத்துங்கள். உங்களது முதலாவது மென்பொருள் காட்சியளிக்கும்.
  6.  ஆனால், நாம் இன்னமும் நிரலாக்கம் செய்யவில்லை அல்லவா? அதனால் எந்தப் பொத்தான்களை அழுத்தினாலும் எதுவித பதிலும் மென்பொருளிடம் இருந்து கிடைக்காது.
   இப்போதுதான் நாம் செய்ய இருக்கும் முக்கிய கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. இப்போது மென்பொருள் இயங்கிக் கொண்டிருந்தால் மூடிவிட்டு தோற்றத் தத்தலில் உள்ள மூடு என்பதைச் சொடுக்குங்கள்:

   Public Class frmThamila
   
     Private Sub btnClose_Click(sender As Object, e As EventArgs) Handles btnClose.Click
   
     End Sub
   End Class

   இங்கே Public Class frmThamila என்பது நிரலாகக்தின் முதல் வரி, இது படிவத்தின் தொடக்கத்தைக் காட்டுகின்றது. End Class என்பது படிவத்தின் முடிவைக் காட்டுகின்றது.

   மூடு என்பதைச் சொடுக்கினோம் அல்லவா? அதன் நிரலாக்கப் பண்புப் பெயரை நினைவுகூறுங்கள்… btnClose அல்லவா? பின்வரும் நிரல் வரிகள் மூடு எனும் பட்டனுக்குரியவை:

   Private Sub btnClose_Click(sender As Object, e As EventArgs) Handles btnClose.Click
   
   '“இங்கேதான் நாம் நிரல்மொழியாக்கம் செய்யவேண்டும்”
   
     End Sub

   எனவே அந்த இடைவெளிக்குள் மென்பொருளை நிறுத்தும் கட்டளை கொடுத்தால் அதனைச் சொடுக்கும் போது மென்பொருள் நிறுத்தப்படும்.

   Me.Close()

   என்று அங்கே எழுதுங்கள்.

   இப்போது,

   Private Sub btnClose_Click(sender As Object, e As EventArgs) Handles btnClose.Click
   
       Me.Close()
   
     End Sub

   என இருக்கவேண்டும்.

   இதேபோல btnVanakkamத்தை சொடுக்கி பின்வருமாறு எழுதுவோம்:

   Private Sub btnVanakkam_Click(sender As Object, e As EventArgs) Handles btnVanakkam.Click
   
       txtHello.Text = "வணக்கம் தமிழா!"
   
     End Sub

   “வணக்கம்” எனும் பட்டனைச் சொடுக்கும்போது உரைப்பெட்டியில் “வணக்கம் தமிழா!” தோன்ற  இக்கட்டளை உதவுகின்றது.

   உரைப்பெட்டியின் நிரலாக்கப் பண்புப் பெயர் txtHello இதனுடன் புள்ளி (.) ஒன்று இட சில நிரல் சொற்கள் தோன்றும் அங்கிருந்து text என்பதைத் தேர்வு சியலாம் அல்லது நீங்களே எழுதலாம். இதன் பின்னர் சமன்பாட்டுகுறி இட்டு, தோன்றவேண்டிய உரையை மேற்கோள் குறியிட்டு எழுதவேண்டும்.

   இப்போது start ஐச் சொடுக்குங்கள்:

உங்களது முதல் மென்பொருளாக்கம் இனிது நிறைவேறியதா?

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/KF7Dd

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 × 4 =