முதற்சங்கம் நிறுவப்பட்ட தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது.

இடைச்சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டுரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை முதலிய 59 புலவர்கள் இடைச்சங்கத்தில் பாடினர்.

இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது.  3700 ஆண்டுகளாக இந்த இடைச்சங்கம் நடைபெற்றுள்ளது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.

இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”

என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது.

இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுணுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம்.  இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. கி.மு. 1500 (?) அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழித்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு பல இடைச்சங்க இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது.

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/2yzdh

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன