சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன.
- மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி
- காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை
- வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம்
- கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல்
- மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் – பாலை
மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர்.
பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள்.
மேலதிகமாகப் படிக்க: http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311333.htm