குறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர்.
தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்வது மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்ற பகுதிகளாகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் “குறவர்” என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
குறிஞ்சி, காந்தள், வேங்கை என்பன இப்பகுதியில் வளரக்கூடிய செடிகளின் பெயராகும். குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சிச் செடியில் (Strobilanths kunthiana) பூக்கும் குறிஞ்சி மலர்களின் நீல நிறத்தால் மேற்கு மலைத்தொடர்ச்சி மலைப் பகுதி “நீலகிரி” (நீலம் + கிரி) எனப் பெயர் பெற்றது.

குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக சேயோன் வழிபடப்பட்டார். முருகன், சிவன் இருவருமே சேயோன் என்று அழைக்கப்பட்டனர். எனினும் முருகனே குறிஞ்சி நிலத்தின் கடவுள் எனப் பலரால் கூறப்படுகின்றது. தெய்வ வழிபாட்டு நெறிகளாக பலியிடுதல், வெறியாட்டல் போன்றன இம்மக்களிடையே இருந்து வந்துள்ளது என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
பண்டைய குறிஞ்சி நில மக்களின் முக்கிய தொழில் கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல், தினைகாத்தல் மற்றும் வேட்டையாடல் என்பனவாகும்.