தலைச்சங்கம் (முதற்சங்கம்)

Posted by

ஏறத்தாழ கி.மு. 7000 தொடக்கம் கி.மு. 3000 வரையான காலப்பகுதி. இதன் தொடக்கம் திட்டவட்டமாகக் கணிப்பில் இல்லை.(1) (2) எனினும் தரவுகளை வைத்துக் கணிப்பிடுவதாயின் கி.மு. 6827 தொடக்கம் கி.மு. 2387 வரையான காலம் எனக் கருதலாம்.

கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இப்பழம் பெரும் பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். இச்சங்கத்தை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89 அரசர்கள் 4440ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக   இறையனார் களவியல் உரை ( இறையனார் அகப்பொருள் என்பது ஓர் தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றிவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாக பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறைஇலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம்.  )கூறுகிறது.

இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர்.

4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன. இவர்களுள் விரிசடைக் கடவுள் தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும்இறையனார்களவியல் உரை கூறுகிறது. இவர்களுள் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார். அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. இதன்படி முதலாவது தமிழ் இலக்கணம் இக்காலப்பகுதியிலேயே வகுக்கப்பட்டுள்ளது என்பதனை அறியலாம். தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு முதற் சங்கம்4440 ஆண்டுகள் தமிழ்ச் சேவை புரிந்தது. இக் காலத்தில் 4  நூல்கள் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.

அவையாவன:

1 . முதுநாரை

2 .முதுகுருகு

3 .பரிபாடல்

4 .அகத்தியம்

பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)

பஃறுளியாற்றிற்கும் குமரிக்கோட்டுக்கும் (குமரி மலை) இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. குமரிக்கோடு எனும் மலையிலிருந்து குமரியாறு, பரளியாறு போன்றன வளத்தைத் தந்தன. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என “தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்குஅடியார்க்கு நல்லார்என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் கூறுகிறார்.

“தென்பாலிமுகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும்ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்தஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்தநாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும்பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற்குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.”(3)

சிலப்பதிகாரத்தில் “பஃறுளியாறும்”, “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்” “கொடுங்கடல் கொண்டது” பற்றிக் கூறப்படுகின்றது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

கடற்கோளால் (சுனாமி) பஃறுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து போயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன..(2) இந்தக் கடற்கோள் (முதலாவது கடற்கோள்?) கிமு 2387 இல் நிகழ்ந்தது என்பர்.(3)

குமரிக்கண்டம் என்றும் இவ்வழிந்த நிலப்பரப்பு குறிப்பிடப்படுகின்றது, லெமூரியாக்கண்டமும் குமரிக்கண்டமும் ஒன்று எனவும் கருதுகோள்கள் உண்டு, ஆனால் லெமூரியாக்கண்டம் என்பது காலப்பகுதியில் மிகவும் பழமைவாய்ந்தது (மில்லியன் வருடங்கள் முன்!) எனவும் ஒரு கற்பனையான கண்டம் எனவும் சொல்லப்படுகின்றது. இது இன்னமும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை.

“முதல் மனிதர்களுடைய தொல்லுயிர் எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, இவை ஏதோ ஒரு கண்டம் கடலில் மூழ்கியதால் அழிந்திருக்கலாம்” எனும் பேராசிரியர் ஏர்ன்ஸ்ட் ஹெக்கல் (Earnst Heinrich Haeckel (1834-1919), German) கூற்றின்படி லெமூரியாக்கண்டம் இருந்திருக்கலாம், ஆனால் அது குமரிக்கண்டம்தானாஎன்பது ஆராயப்படவேண்டியது.

இதுவரைக்கும் மூன்று அல்லது நான்கு கடற்கோள்களால் தமிழர் நிலம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது அல்லது பாதிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: செஞ்சக்தி (பல்கலைக்கழகம்)

உசாத்துணைகள்

  1. தமிழ்இணையப்பல்கலைக்கழகம்,.தமிழ்இணையப்பல்கலைக்கழகம். 1.2 முச்சங்கங்கள். [Online] http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043112.htm.
  2. எம்.ஏ,பெ. சிவராமன்.முதல்சங்கம். தமிழ்எழுத்து. [Online] http://www.tamileluthu.org/tamil-sangam/sangam1/.
  3. தேவநேயப்பாவாணர்,ஞா.தமிழ்வரலாறு. தமிழ்வரலாறு. s.l. : தமிழ்மண்பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000).
  4. [book auth.]நா.ரா. பண்டரிநாதன். தமிழரின்முழுமையானவரலாறு. சென்னை : இராமநாதன்பதிப்பகம்., 2006.
The short URL of the present article is: https://www.thamilkalvi.com/agaGg

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

fourteen − 10 =