உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை

Posted by

தமிழில் உள்ள எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும்.

 

 • அ, ஆ       எனும் முதல் இரு எழுத்துக்களும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு, வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றன.
 •  இ, ஈ, எ, ஏ, ஐ       ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கின்றன.
 • உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன !

நாக்கானது வாயினுள் மேற் சென்றும், தாழ்ந்தும், முன்னும், பின்னும் நகர்ந்தும் மிடற்றிலிருந்து வரும் காற்றினை ஒரு குறிப்பிட்ட ஒலியாக வெளிக்கொண்டு வருகிறது. நாக்கின் அமைவைப் பொறுத்தும் இதழ்கள் குவிவதைப் பொறுத்தும் உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:

 1. இதழ் குவிந்த உயிர்– இதழ்கள் (உதடுகள்) இரண்டையும் குவித்து உச்சரிப்பதால் ஏற்படும் ஒலிப்பு.
  உ – ஊ – ஒ – ஓ – ஔ
 2. இதழ் குவியா உயிர் – இதழ்கள் (உதடுகள்) இரண்டையும் குவியாமல் உச்சரிப்பதால் ஏற்படும் ஒலிப்பு.அ – ஆ – இ – ஈ – எ – ஏ – ஐ
 3. முன் உயிர் – ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையிலும் தொடுகையில் இல்லாமல் (தடை ஏற்படுத்தாமல்) விறைப்பான நிலையில் இருக்கும்போதும் பெறப்படும் ஒலி. இச்சமயத்தில் நாக்கானது மேல் எழுந்து முன்பக்கமாக அமைந்து, ஒலியைத் தடையின்றி வெளிக்கொண்டு வருகிறது.
  இ – ஈ – எ – ஏ
 4. பின் உயிர் – ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு பின் தள்ளிய நிலையிலும் தொடுகையில் இல்லாமல் விறைப்பான நிலையில் இருக்கும்போதும் பெறப்படும் ஒலிஉ – ஊ – ஒ – ஓ
 5. நடு உயிர் – ஒலிப்பின்போது நாக்கு, முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் நடுவில் இருக்கும். அ – ஆ
 6. மேல் உயிர் – நாக்கு வாயின் மேற்பகுதிக்கு கூடிய அளவு அண்மையாக இருக்கும் நிலையில், தடை ஏற்படுத்தாமல் ஒலிக்கப்படும் உயிரொலிகள் இ – ஈ – உ – ஊ
 7. கீழ் உயிர் – நாக்கு வாயின் மேற்பகுதியில் இருந்து கூடிய அளவு விலகிக் கீழே இருக்கும் நிலையில் ஒலிக்கப்படும் உயிரொலிகள்
  அ – ஆ
 8. இடை உயிர் – நாக்கு வாயின் மேல் பகுதிக்கு மிக அண்மையிலோ அல்லது கீழே அதிகம் தொலைவிலோ இல்லாது இடை நிலையில் இருக்கும்.
  எ – ஏ – ஒ – ஓ

 

ஓர் எழுத்து  இரண்டு மூன்று ஒலிப்பு முறைகளைக் கொண்டிருக்கையில் அவற்றை விளங்கிக் கொள்ள பின்வரும் அட்டவணை உதவுகிறது. மேற்குறிப்பிட்ட வகைகளில் இரண்டு இணை சேர்ந்து இவற்றை உருவாக்கின்றது.

எ.கா:

– முன் உயிர் (நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையில்) – இ – ஈ – எ – ஏ

– இடை உயிர் நாக்கானது மிக உயரத்தில் இல்லாமலும் தாழ்ந்த நிலையில் இல்லாமலும் இடையில் நின்று இருப்பது) -எ – ஏ – ஒ – ஓ

மேற்குறிப்பிட்ட இரண்டையும் சேர்க்கும்போது, முன் இடை உயிர் அல்லது இடை முன் உயிர் தோன்றுகிறது இதற்குப் பொதுவான எழுத்துகள் எ மற்றும் ஏ ஆகும்.

உயிர் எழுத்து அட்டவணை (Vowel chart)

குறில் (short) நெடில் (long)
மேல் முன் உயிர்
இடை முன் உயிர்
மேல் பின் உயிர்
இடை பின் உயிர்
கீழ் நடு உயிர்

ஈருயிர் (diphthong)

இதழ் குவியா உயிர்
இதழ் குவிந்த உயிர் ஒள

உயிர் ஒலிகளின் பிறப்பு

முன்
FRONT VOWEL
நடு
CENTRAL VOWEL
பின்
BACK VOWEL
உயர் (மேல்)
High
இ ஈ
i i:

உ ஊ
u u:

இடை
Mid

எ ஏ
e e:

ஒ ஓ
o o:

தாழ் (கீழ்)
Low

அ ஆ
a a:

உயிர் எழுத்துகளின் ஒலி வேறுபாடு

இ, ஈ, எ, ஏ, உ எனும் ஐந்து உயிர் எழுத்துகள் இரண்டு விதமாக ஒலிக்கின்றன.

இ:

 1. இது – இனி – இலை
 2. இடம் – இணை – இழிவு

இங்கு முதற் தொகுதியில் உள்ளவை முன் உயிராக ஒலிக்கின்றன. இரண்டாம் தொகுதியில் உள்ளவை நடு உயிராக ஒலிக்கின்றன. இதற்கு அவற்றுடன் அடுத்து வரும் மெய் எழுத்துகளே காரணம். ட், ண், ள், ழ், ற (ற மட்டும்) எனும் மெய்யெழுத்துகளின் முன்னர் இவ்வுயிர் எழுத்துகள் வரும் போது இவ்வேறுபாடு தோன்றுகின்றது.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

 1. எலி – எருது
 2. எட்டு – எறும்பு – எளிமை

உசாத்துணைகள்

 1. தமிழ் இணையக் கல்விக் கழகம்தமிழ் இணையக் கல்விக் கழகம்
 2. அடிப்படைத் தமிழ் இலக்கணம் – எம்.ஏ நுஃமான்
 3. தமிழ் விக்கிபீடியா
The short URL of the present article is: https://www.thamilkalvi.com/pknVu

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 + 3 =