தமிழ் இலக்கணம் – அறிமுகம்

Posted by

முத்தமிழ் என்று அழைக்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளைக் கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கின்றது.  அகத்திய மாமுனிவரால்

இயற்றப்பட்ட அகத்தியம் என்னும் நூலே முதலாவது தமிழ் இலக்கண நூல் என்று கருதப்படுகிறது, அதன் பின்னர்  தொல்காப்பியமும் பின்னர் 13ம் நூற்றாண்டளவில் நன்னூலும் மூன்று பிரசித்திபெற்ற  இலக்கண நூல்கள் ஆகும்.

 

அகத்தியம் மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே என்பது இறையனார் அகப்பொருள் உரையால் உணரப்பட்டாலும், அகத்தியம் நூல் கிடைக்கவில்லை.

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். சுமார் கி.மு 300 ஆண்டளவில் எழுதப்பட்டது. இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், பலரின் முயற்சியால் வெவ்வேறு காலகட்டங்களில் இந்நூல் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியர் காலத்துப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்

நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ் மொழி இலக்கண நூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப் பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம் வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.

தமிழ் இலக்கணம் பொதுவாக ஐந்து வகைகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளது, எனினும் அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

பைந்தமிழ்

  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. அணி

 

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/jUCxe

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

13 − 2 =