தமிழ் இலக்கணம் – எழுத்து

Posted by

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டும் உண்டு. ஒலி வடிவம் எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியையும் வரிவடிவம் எழுதப்படும் வடிவத்தையும் குறிக்கின்றது. தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் உண்டு. அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்று.

 

முதலெழுத்துகள்

தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" - தொல்காப்பியம்
 "உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" - நன்னூல்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும்.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும்.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.

உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.

உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒஎன்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

மெய்யெழுத்துகள்

க் தொடக்கம் ன் வரையுள்ள (க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ) 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை வல்லினம்மெல்லினம்இடையினம் என மூன்று பிரிவுகளாக உள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துக்கள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களும் வல்லின எழுத்துக்களாகும். இவை வலிய ஓசையுடையவை. இவ்வெழுத்துக்கள் வலி எழுத்துக்கள், வன்கண எழுத்துகள் எனவும் கூறப்படும்.
இவ்வெழுத்துகளைச் சொல்லும் பொழுது வயிற்றுள் இருந்து வலிமையாக காற்று மேலே வரும். எனவே இவை வல்லின எழுத்துகள் ஆகும். கசடதபற என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

ங், ஞ், ண், ந், ம், ன்  எனும் ஆறு எழுத்துக்களும் மெல்லின எழுத்துக்களாகும். இவை மென்மையான ஓசையுடையவை. இவ்வெழுத்துக்கள் மெலி எழுத்துக்கள், மென்கண எழுத்துகள் எனவும் கூறப்படும்.
இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையான முயற்சி போதும். எனவே இந்த மென்மையான எழுத்துகள் மெல்லின எழுத்துகள் எனப்படுகின்றன. ஙஞணநமன என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

ய், ர், ல், வ், ழ், ள்  எனும் ஆறு எழுத்துக்களும் இடையின எழுத்துக்களாகும். இவை இடைப்பட்ட ஓசையுடையவை. இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையும், வன்மையும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது. எனவே இவை இடையின எழுத்துகள் எனப்படுகின்றன. யரலவழள என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

மெய் எழுத்துகள் உயிர்க்குறில் எழுத்துகளைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன.
இவற்றின் (மெய் எழுத்து) ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை ஆகும். மாத்திரை என்றால் ஒரு கை நொடி அளவு (அதாவது கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டும் அளவு) அல்லது கண்ணிமை அளவு எனக் கணக்கிடப்படுகின்றது.

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. – தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்

குறில் எழுத்துகள்     – 1 மாத்திரை  (அ, க, ச, சி, து)
நெடில் எழுத்துகள்     – 2 மாத்திரை (ஆ, கா, சா, சீ, தூ)
மெய் எழுத்துகள்     – 1/2 மாத்திரை  (க், ங், ச், ஞ், ன்)
ஆய்த எழுத்து          – 1/2 மாத்திரை (ஃ)

 சார்பெழுத்துகள்

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும்.

இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்து என்றனர். இப்படிச் சார்பெழுத்து என்னும் பாகுபாட்டைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுவிட்டதால் நன்னூல் சார்பல்லா எழுத்துக்களை முதலெழுத்து எனக் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியது. நன்னூல் சார்பழுத்துக்கள் 10 வகை எனக் காட்டுகிறது.

(1) உயிர்மெய்
(2) ஆய்தம்
(3) உயிரளபெடை
(4) ஒற்றளபெடை
(5) குற்றியலுகரம்
(6) குற்றியலிகரம்
(7) ஐகாரக் குறுக்கம்
(8) ஒளகாரக் குறுக்கம்
(9) மகரக் குறுக்கம்
(10) ஆய்தக் குறுக்கம்

உயிர்மெய்

மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துகள் சேர்வதால் உண்டாகும் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை குறில்,நெடில் ஆகியனவாகும்.

18 (மெய் எழுத்துகள் ) x 12 (உயிர் எழுத்துகள் ) = 216 (உயிர்மெய் எழுத்துகள் ) 

(எ.கா.) : க்+அ=க

ஆய்தம்

ஃ என்ற எழுத்து ஆய்தம் எனப்படுகிறது. இதனை அஃகு என்று கூறுவர். ஃ என்ற இந்த எழுத்து ‘அ’ என்ற உயிர் எழுத்தையும் ‘கு’ என்ற உயிர்மெய் எழுத்தையும் சேர்த்தே ஒலிக்கப்படும்.     உயிர் எழுத்தை முதலாகவும், வல்லின உயிர்மெய் எழுத்தை இறுதியாகவும் கொண்டு இது இடையில் வரும். தனித்து வராது. எனவே இது சார்பெழுத்து எனப்படுகிறது.

(எ.கா.) அஃது, எஃது, எஃகு

பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசைகுறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை, உயிரளபெடை, ஒற்றளபெடை

 உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள) ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர். நெடில்எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.

இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில்இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும்.

(எ.கா.) குழூஉக்குறி, தொகைஇ, கெடுப்பதூஉம், தொழாஅள்

” கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் “

ஒற்றளபெடை

 ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும். செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

(எ.கா.) கலங்ங்கு நெஞ்சம்,  கண்ண் கருவிளை

ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவினைவிட அதிகமாக ஒலிப்பதை அளபெடை     என்று கண்டோம். அவ்வாறே ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரைஅளவினைவிடக் குறைவாக ஒலிப்பதைக் குறுக்கம் என்பர்.

உயிர் எழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என்னும் மூவகை எழுத்துகளும்
குறுகி ஒலிப்பது உண்டு. எனவே குறுக்கம் என்னும் சார்பெழுத்தை ஆறு வகையாக
வழங்குவர். அவையாவன:

(1) குற்றியலுகரம்
(2) குற்றியலிகரம்
(3) ஐகாரக் குறுக்கம்
(4) ஒளகாரக் குறுக்கம்
(5) மகரக் குறுக்கம்
(6) ஆய்தக் குறுக்கம்

 

குற்றியலுகரம்

உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.
இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும்.

(எ.கா.) : பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.

தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, பசு, வடு, அறு முதலியவை.

குற்றியலிகரம்

உகரம் சில இடங்களில் குறுகி, குற்றியலுகரம் ஆவது போலவே, இகரமும் சில இடங்களில் குறுகும். இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர். குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.

தனிமொழிக் குற்றியலிகரம்: மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். இதில் ம் என்ற எழுத்திற்குப் பின் யகரம் வருவதால் குறைந்து ஒலிக்கிறது. இதுவே தனிமொழிக் குற்றியலிகரம் ஆகும்.

(எ.கா.) :  கேண்மியா, சென்மியா

புணர்மொழிக் குற்றியலிகரம்:  இரண்டு சொற்கள் சேரும்போது முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து, இரண்டாம் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது, குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது, இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம், உகரம் குறைந்து ஒலிப்பது போலவே அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

(எ.கா.) : நாடு(ட்+உ) + யாது     =     நாடியாது(ட்+இ)
களிற்று(ற்+உ) + யானை     =     களிற்றியானை(ற்+இ)

ஐகாரக் குறுக்கம்

ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது. ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.

(எ.கா.) :  ஐந்து, வளையல், மலை

ஐ என்னும் எழுத்துக்கு உரிய அளவு இரண்டு மாத்திரை ஆகும். ஆனால், இம் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் இடம்பெற்ற ஐ என்னும் உயிர்நெடில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவினைவிடக் குறைந்து ஒலிக்கிறது. அதுவே ஐகாரக் குறுக்கம் ஆகும்.

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.

(எ.கா.) : ஔவை

 மகரக் குறுக்கம்

“ம்” என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம்எனப்படும். சொல்லின் இறுதியில் அமைந்த    “ம்”     என்னும் மெய்யெழுத்து     வருமொழியில் “வ” என்னும் எழுத்து வந்ததால் தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும்.

(எ.கா.) : வரும் வசந்தம்

 ஆய்தக் குறுக்கம்

புணர்ச்சியில் சொல்லின் இடையில் புதியதாகத் தோன்றும் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவினைவிடக் குறைந்து கால் மாத்திரையாக ஒலிப்பது.

(எ.கா.) : முள் + தீது = முஃடீது
              அல் + திணை = அஃறிணை

தொகுப்புத் துணை மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/courses/hg100/hg113/html/hg113ind.htm
  2. http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211403.htm
  3. http://ta.wikipedia.org/wiki/
  4. அடிப்படைத் தமிழ் இலக்கணம் – எம்.ஏ. நுஃமான் –

 

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/lGwYq

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

fifteen − two =