எட்டுத்தொகை என்பது சங்க காலத்தின் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட எட்டு நூல்களின் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு தொகை நூல்களும் பல புலவர்களால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூற் தொகுப்பில் பல பாடல்களைப் புனைந்தவரின் பெயர் காலத்தால் அழிந்து போயுள்ளது.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
எட்டுத்தொகை நூல்கள்:
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
இத்தொகையுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102. இவற்றைப் பாடியோர் ஒரே காலத்தில் இருக்கவில்லை. இவர்களது தொழில் கூடப் பல்வேறுபட்டவை.
அகப்பொருள், புறப்பொருள் மற்றும் இவை இரண்டும் கலந்து என இந்த எட்டுத் தொகை நூல்களையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
- அக நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
- புற நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து.
- அகமும் புறமும் கலந்து வருவது: பரிபாடல்.
அக நூல்கள் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதியைக் குறிக்கின்றன. புறநூல்கள் மன்னனை அவனது போர்த்திறமையை மற்றும் வெற்றியைக் குறித்துப் பாடப்பட்டதைக் குறிக்கின்றன.