அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது.


பல்வகை உயிரின் ஆதாரங்கள் உண்டு என பாரம்பரிய சீன மருத்துவக் கலை குறிப்பிடுகின்றது. பொதுவான நோக்கில், உயிரின் ஆதாரம் (“கி” ) ஐந்து செயற்பாடுகளால் வரையறுக்கப்படுகின்றது.
- உடலின் அனைத்து உடலியங்கு தொழிற்பாட்டையும் செயற்படுத்தச் செய்தல். இதில் நடுவரையின் (மெரிடியன்) தொழிலைத் தொடக்கி வைத்தலும் அடங்கும்.
- சூடாக்குதல் (உடல், கை, கால்)
- வெளிப்புற நோய்க் காரணிகளில் இருந்து தற்காப்பு
- உடல் நீர்மங்களைப் பாதுகாத்தல்
- உணவு, நீர், சுவாசம் என்பவற்றை உயிரின் ஆதாரமாக (“கி” ) உருமாற்றல்
இச்செயற்பாடுகள் முழுமையாக்கப்படுவதற்கு உயிரின் ஆதாரம் உடலின் உட்பகுதியில் இருந்து வெளிப்புறத்துக்கு (தோல், தசை, எலும்பு) வரவேண்டும். 12 வழமையான மற்றும் 8 மேலதிகமான நடுவரைகள் (மெரிடியன்கள்) பாரம்பரிய சீன மருத்துவக் கலையில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன.
குத்தூசியின் தன்மை (அக்குபஞ்சர் ஊசியின் தன்மை)
குத்தூசி பொதுவாக துருப்பிடிக்காத உருக்கினால் உருவாக்கப்படுகின்றது, எனினும் செப்பு, வெள்ளி, தங்கம் என்று வெவ்வேறு உலோகங்களிலும் கிடைக்கின்றது. இவை வழமையாக ஒருதரம் மட்டும் பயன்படுத்தும் ஊசியாக இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் நோய் நுண்ம ஒழிப்புக்குட்படுத்தி மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இவை 13 தொடக்கம் 130 மில்லிமீட்டர் (0.51 – 5.1 அங்குலம்) வரை நீளமானவை. குறுகிய ஊசிகள் முகம், கண் அருகாமையிலும் நீண்ட ஊசிகள் தசைப்பற்றான பகுதிகளிலும் பயன்படுகின்றன. இவற்றின் விட்டம் 0.16 மில்லிமீட்டர் (0.006 அங்குலம்) தொடக்கம் 0.46 மில்லிமீட்டர் (0.018 அங்குலம்) வரை வேறுபடலாம். ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு பெரும்பாலும் உபயோகிப்பதில்லை.
ஊசி செலுத்தப்படும்போது, துரிதமாகச் செலுத்துவது வலி உணர்வதைக் குறைக்கும்.
“கி” தோன்றும் உணர்வு (De-qi)
உரிய முறையில் ஊசி செலுத்தப்படின் குறிப்பிட்ட மெரிடியனில் ஒருவகை உணர்வு தோன்றும். இது விறைப்பு, கூச்சம், சிலிர்ப்பு போன்று இருக்கும். இவ்வகை உணர்வு இல்லாவிடின் ஊசி தேவையான ஆழத்தில், பொருத்தமான புள்ளியில் செலுத்தப்படவில்லை என்று அறியலாம்.