முரசு நோய்கள் (ஈறு நோய்கள்)

Posted by

(பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது)
சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன.

 முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் இழையங்கள் மற்றும் என்புகள் முதலியவற்றில் ஏற்படும் கிருமித்தாக்க மற்றும் அழற்சி நோயாகும். இது பல் ஈறுகளையும் அதனைச் சுற்றியுள்ள இழையங்களையும் பாதிக்கின்றது.நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு படிகளாக முரசு நோய்கள் காணப்படுகின்றது

1) பல்லெயிற்று அழற்சி அல்லது பல் ஈறழற்சி (Gingivitis)
2) பற்சுற்றி அழற்சி (Periodontitis)

பல் ஈறழற்சியானது குணப்படுத்தப் படாமல் மேலும் தீவிரம் அடைந்தால் பற்சுற்றி அழற்சி ஏற்படும். மேற்குறிப்பிடப் பட்டுள்ள படத்தில் பார்த்தீர்களானால் பல்லைச் சூழவுள்ளது ஈறு என்பதை அறிவீர்கள், அந்த ஈறைச் சூழவுள்ள என்புகள் இணைப்பிழைகள் ஆகியவற்றை பற்சுற்றி (periodontium) என்கின்றோம். சுருக்கமாக முரசு அல்லது ஈற்றில் ஏற்படுவது பல் ஈறழற்சி அதே நேரத்தில் அது கடுமையடைந்து அவற்றைச் சுற்றி ஏற்படுவது பற்சுற்றி அழற்சி.

பல் ஈறழற்சி (Gingivitis)

பல் ஈறுகளில் கிருமித்தாக்கத்தால் ஏற்படும் அழற்சி. முரசானது செந்நிறமாக, வீங்கிக் காணப்படும். பற்களைத் தீட்டும் போது இரத்தம் கசியும். பெரும்பாலும் இத்தகைய நோயுடையோரிற்கு வலி எடுப்பதில்லை, எனவே அதனைப் பற்றி அக்கறை கொள்ளாது உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை.

இது உருவாகுவதற்குரிய முன்னணிக் காரணியாக பாக்டீரியாக்கள் திகழ்கிறது. பொதுவாகவே பற்களில் முரசுகளில் ஒரு நிறமற்ற படலமாக பாக்டீரியாக்கள் படிகின்றன. பற்சூத்தை (dental caries) மற்றும் பற்சுற்றி (periodontal) நோய்களின் ஆரம்ப நிலையில் ஏற்படும் இத்தகைய படலம் பிளாக் (Dental plaque) என்று அழைக்கப்படுகிறது.

இந்தப்படலமானது ஆரம்பத்தில் இலகுவாக விரல் நகம் கொண்டு அகற்றப்படக்கூடியளவு இளகலாகக் காணப்படும். இது அகற்றப்படவில்லை என்றால் 48 மணி நேரங்களுக்குள் கடினமடைந்துவிடும். மேலும் பத்து நாட்கள் செல்கின்றது என்று வைத்துக்கொள்வோம், அதன் பின்னர் அவ்வளவுதான் பாறைக் கற்கள் போல வலிமையுடன் அகற்றவே முடியாத பற்கற்கள் (Dental Calculus or Tartar) அல்லது தாத்தார் எனப்படும் மஞ்சள் நிறமுடைய நிலையை அடைந்துவிடும். எனவே தான் நாளாந்த வாய்ச் சுகாதாரம் அவசியம். ஒழுங்காக பல் துளக்காதவிடத்து இத்தகைய சிக்கல்கள் பற்சிதைவு, பற்சூத்தை மற்றும் பற்சுற்றி நோய்களைத் தோற்றுவிக்கும்.

இத்தகைய பல் ஈறழற்சி பிளாக்கினால் ஏற்படும் ஈறழற்சி (plaque-induced gingivitis) எனக் கூறப்படுகிறது. சிகிச்சை பெறப்படாதவிடத்து இது பற்சுற்றி அழற்சியாக உருவெடுக்கும்.
பல்லின் அமைப்பைப் பற்றி மீண்டும் பார்த்தோமானால், பற்சுற்றி (periodontium) நான்கு வகை இழையங்களால் ஆனது:
1. பற்காரை : பல் வேரின் வெளிப்பகுதியைச் சூழ உள்ளது.
2. காற்றிடை என்பு : தாடையில் பற்களுக்கு ஆதாரமாக விளங்குவது.
3. ஈறு : தொடுப்பிழைய அமைப்பு
4. பல் சுற்றி இணைப்பிழை : பற்காரைக்கும் காற்றிடை என்புக்கும் இடையிலே தொடுப்பாகத் திகழ்வது.
மேற்கூறியவற்றுடன் இன்னும் சில நார்கள், இழையங்கள் சேர்ந்து ஆரோக்கியமான பற்களை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. இந்த அமைப்பினை முரசு தொடுப்புச் சாதனம் (gingival attachment apparatus) என்று அழைப்பர்.

முரசு அழற்சியின் போது பற்களுக்கும் இந்த அமைப்புகளுக்கும் இடையிலான தொடுகையானது இழக்கப்படுகிறது, ஆனால் இது தற்காலிக மாற்றமே, சிகிச்சை பெறப்பட்டால் மீண்டும் பழைய ஆரோக்கிய நிலைக்கு திரும்பி விடும். இங்கு என்புகளோ மற்றைய இழையங்களோ பாதிப்படைவது இல்லை.

காரணிகள்

பக்டீரியாக்களினால் ஏற்படும் படலம்தான் முக்கிய காரணியாகும், அதைத்தவிர வேறு காரணிகளும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாகலாம்.
1. ஹோர்மொன்களின் மாற்றங்கள் : கர்ப்பமுற்று உள்ளபோது, பருவமடைதலின் போது, மாதவிடாய்க் காலங்களின் போது முரசானது முகவும் மெதுமையானதாகக் காணப்படுவதால் முரசழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் பிரெட்னிசொன் (prednisone) போன்ற ஸ்டீரோய்ட் (steroid) ஹோர்மோன் மருந்து வகைகளின் நீண்ட காலப் பாவனையும் காரணிகளுள் ஒன்றாகும்.

2. ஏனைய சில நோய்கள்: நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் (மனித நோயெதிர்ப்புக்குறைப்பான் வைரசு – HIV) , லியுகேமியா (leukemia) எனப்படும் வெண்குருதிப் புற்றுநோய் (இது முரசின் குருதிக் குழாய்களில் மாற்றம் ஏற்படுத்துகிறது), அடுத்ததாக நீரிழிவு நோய் மிக மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.

இங்கு புற்றுநோய் உள்ளவர்களுக்கு முரசு அழற்சி வருமா என்ற கேள்வி கேட்கப்பட்டால், குருதி சம்பந்தமான வெண்குருதிப் புற்று நோய் மட்டுமே காரணியாக உள்ளதுதான் இற்றைவரை அறியப்பட்டுள்ளது. வெண்குருதிப் புற்றுநோய்க் கலங்கள் முரசில் ஊடுருவல் செய்வதால் ஏற்படும் முரசழற்சியானது முரசில் இருந்து இலகுவாக இரத்தம் கசிவதை ஏற்படுத்துகிறது. இதன் போது பக்டீரியாத் தாக்கமும் ஏற்பட்டால் அதனை எதிர்த்துப் போரிடும் தன்மை இழந்த நிலையில் முரசழற்சி தீவிரமடைகிறது. இத்தகையோரில் தூரிகை கொண்டு பல் துலக்கும் போது எப்பொழுதும் இரத்தம் கசியும், இத்தகைய இரத்தக்கசிவு நிற்பதற்கு மிக கூடுதலான கால அவகாசம் தேவைப்படும் (வெண்குருதிப் புற்றுநோய் உள்ளோரிற்கு குருதி உறைய நீண்ட நேரம் எடுக்கும்) இதனைத் தவிர்க்க தூரிகையால் பல் துலக்காது பற்களை மெல்லிய துணி கொண்ட அல்லது பஞ்சு கொண்டோ துடைத்துக்கொண்டு வாயினை பல் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப குளோர்கெக்சிடின் (chlorhexidine) போன்ற கலைவைகளின் உதவியுடன் வாய் கொப்பளித்தல் நன்று. வெண்குருதிப் புற்றுநோய் தீவிரம் மறையும் தருணத்தில் முறையான வாய்ச் சுகாதாரம் முரசுக்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரும்.

3. மருந்து வகைகள்: ஏற்கனவே நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஒரு காரணியாகின்றது எனப் பார்த்தோம், சில மருந்துகளால் ஏற்படும் நோயெதிர்ப்புச் சக்திக் குறைபாடும் ஒரு காரணி என்பதை மறக்கக்கூடாது.
• வலிப்பு நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகள் டிலண்டின் (Dilantin), பெனிடோய்ன் (Phenytoin)
• இதய நோய்களிற்குப் பாவிக்கும் மருந்து Procardia (Nifedipine)
• உறுப்பு மாற்ற சிகிச்சையின்போது பாவிக்கும் சைகிளோஸ்போரின்(Cyclosporine)
• கருத்தடை மாத்திரைகள்
போன்றவை முரசு இழையங்கள் அபரிதமாக வளரக் காரணமாகிறது, இதனால் பிளாக்கை (கிருமி வன்படலத்தை) அகற்றல் கடினமாகிறது எனவே ஈறு அழற்சி உருவாகிறது.

4. உயிர்ச்சத்துக்கள் குறைபாடு: உயர்ச்சத்து சி அல்லது அஸ்கொர்பிக் அமிலம் ( Vitamin C or Ascorbic acid) குறைபாடு ஸ்கேர்வி (Scurvy) எனப்படும் முரசு கரைதல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதனைத் தவிர நியாசின் உயிர்ச்சத்தும் முரசு அழற்சி ஏற்பட ஒரு காரணியாகிறது, எனினும் இன்றைய சமூகத்தில் இத்தகைய குறைபாடுகளால் ஏற்படும் ஈறு அழற்சி மிகக் குறைவானதே.

5. பழக்க வழக்கங்கள்: ஒவ்வாத பழக்கங்களான புகைப்பிடித்தல் முரசு அழற்சியை உருவாக்குவதுடன் அது குணமாவதையும் தடுக்கிறது. நாளாந்த ஒழுங்கான பற்சுகாதாரம் இவற்றைத் தடுக்கும்.

6. பரம்பரை பல் வியாதிகள்.

7. பூஞ்சான் (பங்கசு – Fungus) வகைகளின் தாக்கம்: பொதுவாக வாய்க்குழியில் பூஞ்சான்கள் மிகக்குறைவானதாகவே காணப்படும். நீண்ட நாட்களாக நுண்ணுயிர் எதிர்ப்பான் (antibiotics) மருந்துகளை உபயோகிப்பதால் கண்டிடாத் தாக்கம் (candidiasis) எனப்படும் பங்கசு நோய் நாக்கில் மற்றும் முரசுக்களில் படலமாகப் பரவ வாய்ப்புள்ளது.

8. மேலும் முற்றிலும் வெளிக்கொணரப்படாத பற்களால் பல்சுற்றி முடியழற்சி (pericoronitis) ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் கீழ் ஞானப்பற்கள் உருவாகும்போது, முரசானது பல்முடியினை மூடுவதால் வீக்கம் ஏற்பட்டு உருவாகும். சிறிதளவே வெளியே நீட்டப்பட்ட பற்களின் இடைவெளியில் உணவுக்கூறுகளும், பக்டீரியாக்களும் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

நோய் அறிகுறிகள்:
• முரசு வீக்கம்
• சிவந்த அல்லது ஊதா நிற ஈறுகள்
• தொடும் போது வலி
• பற்தூரிகை கொண்டு பல் துலக்கும் போது இரத்தக்கசிவு ஏற்படல்.
• கடினமான உணவுப்பொருள்களை உண்ணும் போது ( உதாரணமாக ஒரு ஆப்பிளைக் கடிக்கும் போது) இரத்தக் கசிவு ஏற்படல்
• தொடர்ச்சியான வாய் துர்நாற்றம், வாயில் ஒருவித சுவைத்தன்மை ஏற்படல்.
• பற்களுக்கும் முரசுக்கும் இடையில் இடைவெளி ஏற்படல் , பற்களில் ஆட்டம் காணப்படல்இந்தப் படத்தில் புள்ளித்தன்மையும் (வெள்ளை அம்புக்குறி) புள்ளித்தன்மை அற்றுப்போய் காணப்படலும்(நீல அம்புக்குறி) காணலாம்.

 

இவற்றைத்தவிர சாதாரண முரசில் காணப்படும் புள்ளித்தன்மை (stippling) (படத்தில் காண்க) அற்றுப்போகலாம் இதனால் முரசானது பளபளப்பான தன்மையைப் பெறும். எனினும் புள்ளித்தன்மை அற்றுப் போதல் நோய்க்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது, ஏனெனில் ஆரோக்கியமான பற்களுடைய சிலருக்கு புள்ளித்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஏற்கனவே புள்ளித்தன்மை இருந்து பின்னர் அது மறைந்தால் அது நோயால் ஏற்பட்டது எனக் கருதலாம்.

சிகிச்சை

சிகிச்சையின் முக்கிய நோக்கம் இடைவெளி உருவாக்கி பிரிந்த முரசையும் பற்களையும் சேர்ப்பதுடன் முரசுகளில் ஏற்பட்ட வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், நுண்ணங்கிகளுக்கு எதிரான சிகிச்சையுடன் மேலும் நோயானது தீவிரமடைதலைத் தடை செய்தல். எவ்வளவு விரைவில் ஆரம்பநிலையில் சிகிச்சை பெறப்படுகிறது அவ்வளவுக்கு பற்களின் ஆரோக்கியநிலை மீளப்பெறப்படும்.
• பற்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பற்றீரியாக் கிருமிகள் உண்டாதற்கான மூல காரணத்தை கண்டு பிடித்து அகற்றுதல்
இதனை பல் மருத்துவரிடம் ஒழுங்காக அணுகுவதால் நிறைவேற்றலாம்.
• விற்றமின் குறைவால் உண்டாகியிருந்தால் அதற்கான விற்றமின் மாத்திரைகளை எடுத்தல்.
• சிற்றிரஸ் பானங்கள், வலிமையான உணவுகள், கார உணவுகள், மதுபானங்கள், சிகரெட்டு போன்றவை இயன்றவரை தவிர்த்தல்.
• செயற்கையான பற்கள், குருதி வடிதலை மிகைப்படுத்தும். ஆகவே இவற்றை உணவை உட்கொள்ளும் போது மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.
• நீரில் தோய்ந்த பஞ்சையோ, அல்லது மெல்லிய துணியையோ குருதி வடியும் ஈறில் சிறிது நேரத்திற்கு வைப்பதன் மூலம் குருதி கசிவதை நிற்பாட்டலாம்.
• மென்மையான பற் தூரிகை கொண்டு பற்களை துலக்கலாம். உப்புத் தண்ணீர், அல்லது அல்ககோல் அல்லது குளோர்கெக்சிடின் சேர்ந்த வாய் கொப்புளிக்கும் திரவம் கொண்டு வாயை சுத்தப்படுத்தல். காலையும், மாலையும், உப்புக் கலந்த இளஞ் சுட்டு நீர் கொண்டு, வாயை கொப்பளிப்பதன் மூலம் சவ்விலுள்ள வீக்கத்தை குறைத்து சுற்றோட்டத்தை ஒழுங்காக்கலாம்.

மருத்துவ சிகிச்சை முறைகள் அறுவைச்சிகிச்சை அற்றதாகவும், அறுவைச்சிகிச்சை உடையதாகவும் காணப்படுகிறது.

அறுவைசிகிச்சை அற்ற முறை
• திறமை மிக்க பல் மருத்துவரின் உதவியுடன் பற்களைச் சுத்தம் செய்தல்: தாத்தார் நிலைக்கு அடைந்த வன்மையான பிளாக்கானது தொழில் நெறிஞரின் உதவி கொண்டே அகற்றப்பட முடியும்.
• படலம் நீக்கலும் (Scaling) பல்வேர் மட்டப்படுத்தலும் (root planing) : இவை பல்மருத்துவரால் விசேட உபகரணம் கொண்டு செய்யப்படும் ஆழ்ந்த சுத்தப்படுத்தும் முறையாகும். படலம் நீக்கலில் பிளாக்கும் தாத்தரும் அகற்றப்படும் அதே நேரம் பல்வேர் மட்டப்படுத்தலில் பல்வேரின் மேற்பகுதியின் கரடுமுரடான பகுதிகள் சீரானதாக்கப்படுகிறது, இதன்மூலம் பல்வேரும் முரசும் மீண்டும் சேர்வது இலகுவாவதுடன் பாக்டீரியாக்கள் படிவது தடுக்கப்படுகிறது.


படலம் நீக்கல் நவீன மருத்துவத்தில் மீயொலிப் படலம் நீக்கல் கருவி மூலம் செயற்படுத்தப்படுகிறது. (Ultra Sonic scaling)
இந்தச் செயன்முறைகளுடன் பாக்டீரியாக்களை அழிக்கும் முறையாக நுண்ணுயிர் எதிர் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. உ-ம்: க்ளோர்கெக்சிடின் ஐதரசன் பெரோக்சைட்டு போன்ற வாய் கொப்பளிக்கும் திரவங்கள், மெட்ரானிடசோல், டொக்சிசைக்கிளின் குளிசை மருந்துகள். மேலும் புளோரைட் கொண்ட பற்பசையும் பக்டீரியாவுடன் போராட உதவுகிறது.
கவனிக்கப்படாத பல் ஈறழற்சி ஆபத்தில் முடியும் என்பதை மறக்கக்கூடாது.
தடுக்கும் முறைகள்
• ஏற்கனவே கூறியது போல நாளாந்த பற் சுகாதாரம்.
• கல்சியம், புளோரைட் கொண்ட பற்பசை
• கல்சியம் நாளாந்தப் பாவனை பேணுதல்
• உயிர்ச்சத்துக்கள் சி போன்றவை குறையாமல் பேணுதல்
• பல் மருத்துவரிடம் குறைந்த பட்சம் வருடத்திற்கு இரு தடவை செல்லுதல்

உசாத்துணைகள்

1. Merck. Gingivitis. Merck manual. [இணையம்] http://www.merck.com/mmhe/sec08/ch115/ch115b.html.
2. Wikipedia. Gingivitis. Wikipedia. [இணையம்] 2010. http://en.wikipedia.org/wiki/Gingivitis.
3. WebMD. Oral Health Guide. WebMD. [இணையம்] http://www.webmd.com/oral-health/guide/ … toms-types.
4. eMedicineHealth. gingivitis article . eMedicineHealth. [இணையம்] http://www.emedicinehealth.com/script/m … 936&page=1.
5. http://www.procini.com/images/diseases.jpg. http://www.procini.com. [இணையம்] http://www.procini.com/images/diseases.jpg.
6. Ann, Dr.Lee. Procedures. drleeannhovious. [இணையம்] http://www.drleeannhovious.com/index.html.
The short URL of the present article is: https://www.thamilkalvi.com/zxCBK

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four × 1 =