இதய முணுமுணுப்பு (Heart murmur)

Posted by

இதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். [1].

இதய அடைப்பிதழ் நோய்களின் போது அடைப்பிதழ்களில் குறுக்கத்தால் அல்லது குறைதிறனால் ஏற்படும் குருதியோட்ட மாறுபாடு அல்லது அசாதரணமான குருதி செல்லும் வழிகள் தோன்றும் போது உண்டாகும் குருதியோட்ட மாறுபாடு போன்றவற்றால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு குறைபாட்டு முணுமுணுப்பு ஆகும்.இதயத்தின் சுருங்கி விரிதலைப் பொறுத்து இதய முணுமுணுப்பு வகைப்படுத்தப்படுகிறது. இதயம் சுருங்கும் போது ஏற்படும் முணுமுணுப்பு ஒலியானது இதயச்சுருக்க முணுமுணுப்பு (systolic heart murmur) என்றும் இதயம் விரிவடையும் போது ஏற்படும் முணுமுணுப்பு ஒலியானது இதய விரிவு முணுமுணுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் இடைவிடாது ஏற்படுமாயின் தொடர் முணுமுணுப்பு எனப்படும். [2]

வகைகள்


ஏழு வேறுபட்ட இயல்புகளைப் பொறுத்து இதயமுணுமுணுப்பு பாகுபடுத்தப்படலாம்: நேரம், வடிவம், அமைவிடம், பரவுதல், தீவிரம், சுருதி, தன்மை.[3]

* நேரம் முணுமுணுப்பானது இதயச்சுருக்கதின் போது அல்லது விரிவின் போது ஏற்படுவதைக் குறிக்கிறது.
* வடிவம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒலியின் தீவிரத்தைக் குறிக்கிறது ; இவை சீர் அதிகரிப்பாக (crescendo) அல்லது சீர் குறைதலாக (decrescendo) அல்லது அதிகரித்துப் பின்னர் குறைதலாக காணப்படலாம்( crescendo-decrescendo).
* அமைவிடம் எங்கே முணுமுணுப்பு சிறப்பாக இதய ஒலிமானி உதவியுடன் கேட்கலாம் என்பதைக் குறிக்கிறது. மார்பில் இந்த அமைவிடங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இதயத்தின் பகுதியைக் குறிக்கிறது. எ.கா: இடது இரண்டாம் விலா என்பு இடைவெளியில் நுரையீரல் அடைப்பிதழ்க்குரிய ஒலி கேட்கலாம்.
* பரவுதல் என்றால் குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தியாகும் ஒலி எங்கெல்லாம் பரவும் என்பதைக் குறிக்கும், பொதுவாக குருதி ஓட்டத்தின் திசையிலேயே ஒலி பரவுகிறது.
* தீவிரம் முணுமுணுப்பின் ஓசையைக் குறிக்கிறது, இது ஒன்றிலிருந்து ஆறு வரைக்கும் வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
* சுருதி குறைவான, நடுத்தரமான, உயர்ந்ததாக இருக்கலாம், இதய ஓலிமானியின் பிரிபடலம் (diaphragm ) அல்லது பெல் (bell) பகுதியைப் பயன்படுத்தி இதனைத் தீர்மானிக்கலாம்.
* ‘தன்மை என்பது முணுமுணுப்பு எவ்வாறு ஒலிக்கிறது என்பதாகும், இது ஊதும் ஒலி போன்று, கடுமையான, உருட்டொலியாக அல்லது இசை போன்று அமையும்.

முணுமுணுப்பு வகுப்புகள்

வகுப்பு     விளக்கம்
வகுப்பு 1     மிகவும் மந்தமான ஓசை
வகுப்பு 2     மெல்லிய ஓசை
வகுப்பு 3     இதய முன்பகுதி (precordium) முழுவதும் கேட்கும்
வகுப்பு 4     சத்தமானது, தொடு உணர்வு அதிர்வுடன் கூடியது (அதிர்வு கை மூலம் தொட்டு உணரக்கூடியது)[4]
வகுப்பு 5     மிகவும் சத்தமானது, தொடு உணர்வு அதிர்வுடன் கூடியது. மார்பில் இருந்து இதய ஒலிமானி சற்று விலத்தி வைக்கும்போது கூடக் கேட்கலாம்.
வகுப்பு 6     மிகவும் சத்தமானது, தொடு உணர்வு அதிர்வுடன் கூடியது. மார்பில் இருந்து இதய ஒலிமானி முழுமையாக விலத்தி வைக்கும்போது கூடக் கேட்கலாம்.

முணுமுணுப்பு ஒலியை மாற்றவல்ல காரணிகள்

* மூச்சிழுத்தல் வலது கீழிதயவறையுள் இரத்தம் நிரப்பப்படும் அளவைக் கூட்டுகிறது, இதனால் குருதி வெளிச்செலுத்தும் நேரம் நீட்டப்படுகிறது, இந்தச் செயன்முறை மூலம் முக்கூர்ப் பின்னொழுக்கு முணுமுணுப்பு மற்றைய முணுமுணுப்புகளில் இருந்து வேறுபடுத்தி அறியப்படுகிறது, இது கர்வலோவின் முறை எனப்படுகிறது. இடது இதயத்தில் இருகூர் அடைப்பிதழில் ஏற்படும் முணுமுணுப்பு உட்சுவாசத்தின் போது மாறுவதில்லை, எனவே மூச்சு இழுத்து நிறுத்திவைக்கப்ப்படும்போது முணுமுணுப்பு அதிகரித்தால் அது வலது புறத்தில் முக்கூர்ப் பின்னொழுக்கால் ஏற்பட்டது என அறிந்துகொள்ளலாம். [5][6]
* சடுதியாக எழும்பி நிற்றல்
* குந்துகை
* வல்சல்வா முறை மூலம் மிகைவளர்ச்சி தடுப்பு இதயத் தசைநோயில் முணுமுணுப்பின் சத்தம் அதிகமாகிறது, இது இந்த நோயை அடையாளம் காண உதவி புரிகிறது. [7]
* கையை இறுக்கப்பற்றுதல்
* அமைல் நைத்திரைட்டு
* மெதொக்சாமைன்
* படுக்கும் பக்கம், இடது புறமாகப் படுப்பவர்களிடம் இருகூர் அடைப்பிதழின் முணுமுணுப்பை துல்லியமாகக் கேட்கலாம்.

உசாத்துணைகள்

1. ↑ heart murmur at Dorland’s Medical Dictionary
2. ↑ continuous murmur at Dorland’s Medical Dictionary
3. ↑ “Murmur: characteristics”. LifeHugger. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
4. ↑ “Medline Plus Medical Dictionary, definition of “cardiac thrill””.
5. ↑ Lembo N, Dell’Italia L, Crawford M, O’Rourke R (1988). “Bedside diagnosis of systolic murmurs”. N Engl J Med 318 (24): 1572–8. doi:10.1056/NEJM198806163182404. PMID 2897627.
6. ↑ Maisel A, Atwood J, Goldberger A (1984). “Hepatojugular reflux: useful in the bedside diagnosis of tricuspid regurgitation”. Ann Intern Med 101 (6): 781–2. PMID 6497192.
7. ↑ Harrison’s internal medicine 17th, chapter 5 disorders of the cardiovascular system, question 86-87, self assessment and board review

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/ewmSx

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

two × 4 =