நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு

Posted by

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு (frontal bone) உருவத்தில் சிப்பியின் ஓடு போன்று அமைந்திருக்கும். இது இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டது:

* நெற்றியை உண்டாக்கும் நிலைக்குத்தான செதிலுருப்பகுதி (squama frontalis);

* கட்குழிப்பகுதி: கட்குழியின் மற்றும் நாசிக்குழியின் கூரையை ஆக்கும் கிடையான அல்லது கட்குழியைச்சூழவுள்ள (pars orbitalis) பகுதி.

==செதிலுருப்பகுதி (squama)==

செதிலுருப்பகுதி (squama frontalis) வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு ஆகிய இரு மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளது: .

வெளிமேற்பரப்புப் பகுதி குவிவானதாகும், இதன் கீழ் மையப்பகுதியில் முன்பொருத்துக்களின் (frontal suture) எச்சங்கள் காணப்படும், கைக்குழந்தைகளில் இந்தப் பொருத்தானதுநுதல் எலும்பை இரண்டாகப் பிரிக்கின்றது, குழந்தையின் வளர்ச்சியின் போது இது படிப்படியாக மறைந்துவிடும்.

 

இந்தப் பொருத்துக்கு இருபுறமும் கட்குழியின் மேல் ஓரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று சென்ரி மீட்டர் உயரத்தில் வட்டவடிவான மேட்டுப் பகுதி காணப்படும், இது முன்புற மேடு (frontal eminence) எனப்படும். இந்த உயர்ந்த பகுதியானது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது, இளவயதுடையோருக்கு மிக்க உயர்ந்து காணப்படும்; இந்த மேட்டிற்கு மேலே உள்ள பகுதி மிருதுவானது. முன்புற மேட்டின் கீழே காணப்படும் வரிப்பள்ளத்தைத் தொடர்ந்து மிகைப்பிசிர் வளைவு (superciliary arche) காணப்படும்; இவை மைய நோக்கி தெளிவாகக் காணப்படும், மேலும் மறு புறத்தில் உள்ள வளைவுடன் தொடுக்கப்படும் போது நெற்றிப்புடைப்பு (glabella) உருவாகிறது. இது ஆண்களில் பெரிதாகக் காணப்படும். மிகைப்பிசிர் வளைவின் கீழ் காணப்படும் வளைந்த மற்றுமொரு மேடு கட்குழி மேலோரம் (supraorbital margin) ஆகும். இது கட்குழியின் மேல் எல்லையை ஆக்குகிறது மேலும் செதிலுருவை கட்குழிப் பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இதன் மையவிலகிய பகுதி கூர்மையானதாகவும் முனைப்பாகவும், மையப்பகுதி வளைவானதாகவும் காணப்படுகிறது. மையப்பகுதிக்கும் நடுப்பகுதிக்கும் இடையே ஒரு பிளப்பு அல்லது துவாரம் காணப்படுகிறது, இதனூடே கட்குழி மேல் குருதிக்குழாய்களும், நரம்புகளும் செல்லுகின்றன. கட்குழி மேலோரம், மையவிலகிய பகுதியில் பொட்டு எலும்பு துருத்தமாக (zygomatic process) கன்ன எலும்புடன் இணைவதன் மூலம் முடிவடைகிறது.

உள்மேற்பரப்புப்பகுதி குழிவானது, இதன் மையப் பகுதியில் நிலைக்குத்தாக வரிப்பள்ளம் காணப்படுகிறது இது உச்சி வகிட்டுக்குழி (sagittal sulcus) எனப்படும், இதன் இருபுற விளிம்புகளும் கீழ்ப்பகுதியில் இணைந்து முன் முகட்டை ( frontal crest) உருவாக்குகின்றது. உச்சி வகிட்டுக்குழியின் விளிம்புகளும் முன் முகடும் மூளையின் அரிவாளுரு மூளைய மடிப்புடன் (falx cerebri) தொடுக்கப்பட்டு மேல் வகிட்டுக் காற்றுக்குடாவை (superior sagittal sinus) உருவாக்குகின்றது.

முன் முகடு முடிவடையும் பகுதியின் கீழே ஒரு சிறு பிளவு காணப்படும், நெய்யரி எலும்புடன் நுதல் என்பு மூட்டப்படுவதால் இது துவாரமாகிறது, இது குருட்டுத் துவாரம் (foramen cecum) என அழைக்கப்படுகிறது. ஆட்களைப் பொருத்தவரையில் இந்தத் துவாரத்தின் அளவு வேறுபடும்; பொதுவாக இந்தத் துவாரம் அடைக்கப்பட்டு இருக்கும், இது திறந்துள்ளபோது மூக்கிலிருந்து மேல் வகிட்டுக் காற்றுக்குடாவிற்கு சிரை ஒன்றை உட்புகவிடுகிறது. இது ஒரு முக்கியமான மருத்துவப் பொருளாகும்; மூக்கில் ஏற்படும் நுண்ணுயிர்த் தொற்றுக்கள் மூளையுள் பரவ இது வழிவகுக்கிறது.

மையப் பகுதியின் இருபுறங்களிலும் காணப்படும் சிறு மடிப்புக்களும் பள்ளங்களும் மூளையின் மடிப்புகளுக்குரியதாக விளங்குகிறது, மேலும் எண்ணிக்கையில் கூடியளவில் மிகச்சிறிய சுவடுகள் மூளையமென்சவ்வுக் குருதிக்குழாய்களுக்குரியதாகும்.

 

==கட்குழிப்பகுதி (pars orbitalis)==

முன்னுச்சி எலும்பின் கட்குழி அல்லது கிடைப்பகுதி இரண்டு மெல்லிய முக்கோண வடிவத் தட்டுக்களைக் கொண்டிருக்கின்றது, இது கட்குழித்தட்டு (orbital plate) என அழைக்கப்படுகிறது; கட்குழியின் கவிந்தகூரையை ஆக்குகின்றது. கட்குழித்தட்டுக்கள் நடுப்பகுதியில் உள்ள நெய்யரிப் பிளவின் (ethmoidal notch) மூலம் பிரிக்கப்படுகின்றது.
கட்குழிப்பகுதி மேற்பரப்புக்கள்
• கட்குழித்தட்டின் கீழ் மேற்பரப்பானது வழவழப்பானதாகவும் உட்குழிந்ததாகவும் காணப்படும்; இதனை கட்குழி முகப்பரப்பு (facies orbitalis) என அழைக்கலாம், இதன் வெளிநோக்கிய அல்லது மையவிலகிய பகுதியில் ஒரு ஆழமில்லாக் குழிவு காணப்படுகிறது, இது கண்ணீர்ச் சுரப்பியின் அமைவிடமான கண்ணீர்க்குழி (lacrimal fossa) ஆகும். மையநோக்கிய நாசிப் பகுதியில் உள்ள கப்பியுருக் குழிவு (fovea trochlearis) என அழைக்கப்படும் குழிவில், விழி மேல் சரிவுத்தசையின் (obliquus oculi superior) கசியிழையப் பகுதி இணைக்கப்படுகிறது.
• மேல் மேற்பரப்பு குவிவு வடிவானது; இங்கு மூளையின் முன் சோணை (frontal lobe) மடிப்புகளிற்குரிய குழிவுகளோடு குருதிக் குழாய்களின் வரிப்பள்ளங்களும் காணப்படுகிறது.
நெய்யரிப் பிளவின் முன்புறத்தில் காணப்படும் நுதலென்பின் சிறிய கூர் வடிவ நீட்டம் நுதலென்பு முள் (frontal spine) எனப்படும், இதன் இருபுறமும் முன்புற காற்றுக்குடாக்கள் (frontal air sinuses) திறக்கின்றது.

 

== மூட்டுப் பொருத்தம் ==

நுதல் எலும்பு 12 எலும்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது: ஆப்புரு, நெய்யரி, சுவரெலும்பு (2), நாசி (2), மேற்றாடை (2), கண்ணீரெலும்பு (2), கன்ன எலும்பு (2).

 

==முளையவியல்==

 

நுதல் எலும்பு, நரம்பு முகட்டுக் கலங்களில் (neural crest cells) இருந்து உருவானதென கருதப்படுகிறது. (1) (2)

 

===என்பாக்கம்===

வலப்பகுதிக்கு ஒரு மையமும், இடப்பகுதிக்கு ஒரு மையமுமாக சவ்வில் உள்ள இரு முதன்மை என்பாக்கு மையங்களில் இருந்து நுதல் எலும்பு உருவாகிறது, இரண்டாம் மாத கருவளர்ச்சி நிறைவின் போது என்பாக்கம் ஆரம்பமாகிறது. கட்குழி மேல் ஓரத்தின் மேலே உள்ள என்பாக்கு மையத்தில் இருந்துமேற்புறம் நோக்கியும் பிற்புறம் நோக்கியும் என்பாக்கம் நிகழ முறையே செதிலுருப் பகுதியும் கட்குழிப் பகுதியும் உருவாகின்றன. பிறப்பின் போது இந்த என்பு இடது, வலது என இரு பகுதிகளாக முன் பொருத்து (frontal suture) மூலம் பிரிக்கப்பட்டு இருக்கும், இது எட்டு வருடங்களில், கீழ்ப்பகுதியைத் தவிர, இணைந்து தனி எழும்பாகிவிடும், எனினும் சிலரில் மிகவும் அரிதாக இவை இணைவதில்லை.

 

== உசாத்துணைகள் ==

* Kirby, ML; Waldo, KL. Circulation (1990) 82:332-340.

* Msx2 and Twist cooperatively control the development of the neural crest-derived skeletogenic mesenchyme of the murine skull vault. ; http://lib.bioinfo.pl/pmid:14597577; (2003)

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/HJI4A

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

13 − 10 =