வேதியியல் மற்றும் இயற்பியலில், அணுக் கொள்கை என்பது ஒரு பொருளின் இயல்பைப் பற்றிய கோட்பாடு, இதில் ஒரு பொருளானது அணு எனும் சிறிய அலகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது; அதனை மேலும் பிரிக்கமுடியுமா இல்லையா என்பது பற்றிய பலரது கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது.

 ரொபர்ட் போய்ல் (Robert Boyle)  

ரொபர்ட் போய்ல் (25 சனவரி  1627 – 31 திசம்பர்  1691) அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இரசவாதியாக இருந்தார், போயிலின் விதி எனும் வேதியியல் விதி இவரால் ஆக்கப்பட்டது. இவரே தனிமங்கள் (மூலகங்கள், elements) பற்றி முதலில் தெளிவாகக் குறிப்பிட்டார். இலண்டனில்  “The Sceptical Chymist” எனும் நூல் மூலம் தனது கருத்துக்களை வெளியிட்டார்.  நவீன வேதியியலின் நிறுவனர் என்று அழைக்கப்படுகின்றார்.

வில்லியம் புரவுட் (William Prout)

வில்லியம் புரவுட் (15 சனவரி 1785 – 9 ஏப்ரல் 1850) அணு எனும் கருத்துக்கு வழியமைத்தவர். இவரது கருத்தின்படி “ஒவ்வொரு தனிமத்தினதும் அணுத்திணிவு ஐதரசனின் திணிவின் மடங்குகளாக அமைகிறது. ஒரு தனிமத்தின் அடிப்படைக்கூறு ஐதரசன் ஆகும் (இதனை புரோட்டைல் என்றார்).”

ஜோன் டால்டன் (Jhon Dalton)

ஜோன் டால்டன் (6 செப்டம்பர்1766 – 27 சூலை1844) என்பவரே முதன்முதலில் அணுக்கொள்கைகளை முன்வைத்தார். ஜோன் டால்டன் அறிமுகப்படுத்திய அணுக் கொள்கைவேதியியல் சிந்தனைகளில் ஓரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது.

டால்டனின் அணுக்கொள்கை

 1. எல்லா பொருட்களும் மிக நுண்ணிய துகள்களாகிய அணுக்களால் ஆக்கப்பட்டவை.
 2. அணுக்களைப் ஆக்கவோ அல்லது மேலும் பிரிக்கவோ முடியாது.
 3. ஒரு தனிமத்தின் (மூலகத்தின்) அணுக்கள் யாவும் எல்லா வகையிலும் ஒரே தன்மையானவை. எ.கா: திணிவு, வேதியல் இயல்பு
 4. தனிமங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டுக் காணப்படுவதற்கு அவற்றின் அணுக்களிடையே உள்ள வேறுபாடே காரணம்.
 5. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சிறிய முழு எண் விகிதங்களில் பிணைவதனால் சேர்மங்கள் (சேர்வைகள்) உண்டாகின்றன.
 6. வேதியல் வினை (இரசாயனத் தாக்கம்) அணுக்கள் மீள் ஒழுங்கு செய்யப்படுவதால் ஏற்படுகின்றது.

ஜோன் டால்டன் அணுக்களையும் சேர்மங்களையும் குறியீடுகள் மூலம் காட்டினார்.

இக்கொள்கைகளில் உள்ள பல வழுக்கள் திருத்தியமைக்கப்பட்டது:

 1.      பொருட்களின் சிறிய துகள்கள் அணுக்கள் அல்ள. அணுக்களில் இலத்திரன், புரட்டோன், நியுத்திரன் போன்ற அடிப்படை அணுத்துகள்கள் உண்டு.
 2.     கருத்தாக்கங்களின் போது (வேதியியல் தாக்கங்களின் போது அல்ல) அணுக்கள் ஆக்கப்படுகின்றன; அழிக்கப்படுகின்றன.
 3.      ஒரு தனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லா வகையிலும் ஒரே தன்மையானவை அல்ல. ஒரே தனிமம் பல திணிவுகளைக் கொண்டதாயிருக்கும்.
 4.      வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சிறிய முழு எண் விகிதங்களில் பிணைவதனால் சேர்மங்கள் (சேர்வைகள்) உண்டாகின்றன என்பது உண்மையெனினும் இதற்கு விதிவிலக்கு உண்டு.

தொம்சனின் அணு பற்றிய கோட்பாடு

தொம்சன் அணு மாதிரிசேர்.ஜே.ஜே. தொம்சன் (Joseph John Thomson)  ஓரு குறிப்பிட்ட அணுவின் உள்ளமைப்பை விளக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இகொள்கையின்படி அணுவானது, நேர்மின்னூட்டபட்ட கோளங்களினால் ஆனது. இதனுள்,அணுவில் காணும் நேர்மின்னூட்டத் துகள்களுக்குச் சமமாக எலக்ட்ரான்கள் (இலத்திரன்கள்) பதிக்கப்பட்டுள்ளன என அறிவித்தார். இக்காரணத்தின் விளைவாக அணுவானது நடுநிலைத் தன்மையைப் பெற்றுள்ளது எனவும் அறிவித்தார்.

தொம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (கதோட்டுக் குழாய் – Cathode Ray Tube)  உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும்.

கதோட்டுக் கதிர்க்குழாய்

வாயுக்கள் தாழமுக்கத்தில் மிக உயரழுத்த மின்னைக் கடத்தும் என்பது அறியப்பட்டது. 1860 ஆம் ஆண்டில் இருந்து  கதோட்டுக் கதிர்க்குழாய் பயன்படுத்தப்பட்டது.வில்லியம் குரூக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டமையால் குரூக் குழாய் எனவும் அழைப்பதுண்டு. இது ஒரு கண்ணாடியாலான மூடப்பட்ட கொள்கலன், இதன் தொடக்க முனையில் இரு மின்முனைகள் (மின் தகடுகள்) எதிரெதிரே வெற்றிடத்தால் பிரிக்கப்பட்டிருக்கும். இவை உயர் மின் அழுத்த வழங்கியுடன் தொடுக்கப்பட்டு இருக்கும். இவற்றில் மிகவும் விளிம்பில் உள்ள மின்வாயி (கதோட்) கதிர்வீச்சை வழங்குகின்றது. இது கதோட்டுக் கதிர் ஆகும், இக்கதிர் மற்றைய தகட்டில் (அனோட்) உள்ள துவாரம் ஊடாக நேர்கோட்டில் சென்று எதிரே உள்ள உறிஞ்சொளிர்வுத் (புளோரொளிர்வு) திரையில் வண்ண ஒளிர்வை உண்டாக்கும்.

இக்கதிர்வீச்சின் பாதையில், இடையே நேர், மறை ஏற்றம் கொண்ட மின் புலம் ஒன்றை அமைக்கும் போது கதோட்டுக் கதிர் நேர்கோட்டில் செல்லாமல் நேர் ஏற்றம் கொண்ட முனையை நோக்கிச் செல்லுவதை அவதானிக்க முடிந்தது. இதிலிருந்து அதில் இருந்து வெளிப்படும் கதிர் மறை ஏற்றம் கொண்டது எனவும் அதுவே எலக்ட்ரான் எனவும் அறியப்பட்டது. மின்புலத்துக்குப் பதிலாக காந்தப்புலம் ஒன்று அமைக்கும்போது மறை ஏற்றம் கொண்ட முனையை நோக்கிச் செல்லுவதை அவதானிக்க முடிந்தது.

கொத்துப்பேரிக் களி மாதிரி தொம்சன் தனது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட-நிறை விகிதத்தைக் (Charge-mass ratio – e/mகண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் துகள்கள் (Corpuscles)’  என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை மின்னணு (எதிர்மின்னி – electron) என்று உறுதிப் படுத்தினார். இவரது இச்சோதனை வரைக்கும் (1897) அணுவில் சிறிய துகள்கள் இருப்பது பற்றி யாவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவரது ஆய்வு அணுக்கள் மேலும் பிரிக்கப்படக்கூடியவை என்பதற்கு சான்று ஒன்றை முன்வைத்தது.

கிறிஸ்மஸ் களி (Christmas pudding) எனப்படும் உணவில் பழவகைகள் (குறிப்பாகக் கொத்துப்பேரி) பொதிந்துள்ளது போல எலக்ட்ரான்களைச் (plum – கொத்துப்பேரி) சூழ புரட்டோன்கள் (pudding – களி) அமைந்துள்ளன என்றார். இதனை கிறிஸ்மஸ் களி மாதிரி அல்லது கொத்துப்பேரிக் களி மாதிரி (Plum pudding model என அழைத்தார்.

 மிலிக்கனின் எண்ணெய்த் துளிச்சோதனை

1909 இல் மிலிக்கன் (Robert A. Millikan) என்பவர் கார்வே பிளட்சருடன் (Harvey Fletcher ) இணைந்து எதிர்மின்னணுக்களில் (electron) அதனது ஏற்றத்தைத் துணிந்தவர் (1913இல் தனது ஆராய்ச்சிப் பெறுபேறுகளை வெளியிட்டார்) ஆவார். எண்ணெய்த் துளிச்சோதனை (Oil drop experiment) மூலம் இவரது கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இச்சோதனையில் பெற்ற மின்னணுவின் ஏற்றம் 1.5924×10−19 கூலோம் (C) ஆகும். தற்போதைய திருத்தியமைக்கப்பட்ட பெறுமானம்  1.602 x 10−19 கூலோம் (C).

ரதர்போர்டின் அல்பா துகள் சோதனை

ரதர்போர்ட் (Ernest Rutherford) தொம்சனின் மாணவர் ஆவார். எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறிவதற்காக 1911ஆம் ஆண்டு சிதறும் சோதனையை Hans Geiger,  Ernest Marsden ஆகியோருடன் இணைந்து நடத்தினார்.

இயற்கையில் கதிர் வீசும் இயல்புடைய தனிமங்களில் ஒன்றான ரேடியம் (Ra) இதற்குப் பயன்படுத்தப்பட்டது. அதிவேகமாக நகரும் நேர்மின்னூட்டம் உடைய அல்பா துகள்களை மெல்லிய தங்கத் தகட்டின் மீது மோத வைத்தனர். இவற்றின் சிதறல்கள், அதாவது மோதிய பின்னர் அல்பாத் துணிக்கைகள் செல்லும் பாதைகள் உறிஞ்சொளிர்வுத் (புளோரொளிர்வு) திரையில் நுணுக்குக்காட்டி மூலம் அவதானிக்கப்பட்டது:

 1. பெருமளவு அல்பாத்துகள்கள் திசை மாறவில்லை.
 2. ஓரு சில அல்பா கதிர்கள் விலக்கம் பெறுகின்றன.
 3. மிகச்சில 90கோணத்தில் திரும்பின.

பெறப்பட்ட முடிவுகள்:

 1. மெல்லிய தகட்டின் ஊடே பெரும்பகுதியான அல்பா துகள்கள் எளிதில்

ஊடுருவிச் செல்வதால்,  அணுவின் பெரும்பகுதி வெற்றிடமாகும்.

 1. நேரேற்றம் கொண்ட அல்பா கதிர்களில் ஓரு சில விலக்கம் பெறுகின்றன. அணுவின் சிறுபகுதியில் நேரேற்றம் குவிக்கப்பட்டுள்ளது, இதனருகே சென்ற அல்பாத் துகள்கள் தள்ளப்பட்டு விலகின. எனவே, அணுவின் நேர்மின்னூட்டம் அணுவின் ஏல்லா பகுதிகளிலும் தாம்சன் கூறியபடி பரவி அமையவில்லை. இம்மிகச்சிறிய அணுவின் பகுதி  ‘உட்கரு’  ஆகும்.
 2. அணுவின் பருமனை ஓப்பிடும் பொழுது, உட்கரு அடைத்துக் கொள்ளும் பருமன் மிக மிகச் சிறியது. அணுவின் ஆரம் 1010 m எனப்படும் பொழுது,  உட்கருவின் ஆரம் 1015 m ஆகும். இக்கருத்தின்படி உட்கரு ஓரு கிரிக்கெட் பந்து எனக்கருதினால்,  அணுவின் ஆரம் சற்றே ஏறத்தாழ 5 கிலோ மீட்டராகும்.

மேற்சொன்ன ஆய்ந்தறிந்த கருத்துக்களின் படியும், முடிவுகளின் படியும், ரதர்போர்ட் அணுவின் உட்கரு மாதிரியை அறிமுகப்படுத்தினார். இந்த அணு மாதிரியின்படி,

“ ஓர் அணுவின்  மையப்பகுதியில் நுண்ணிய நேர்மின்னூட்டமுடைய உட்கரு உள்ளது. இதனைச் சுற்றி பெரும் வட்ட வடிவப் பாதைகளில் எதிர்மின்னிகள் இயங்குகின்றன. இது கோள் மண்டல மாதிரி (planetary model) என அழைக்கப்படுகின்றது, அதாவது சூரியனைச் சுற்றி கோள்கள் வலம் வருமாற்போல் சிறிய நேரேற்றம் உடைய கருவைச்சுற்றி எதிர்மின்னிகள் வலம் வருகின்றன.

ரதர்போர்ட்டின் அணு மாதிரியில் குறைபாடுகள் உள்ளதென அறியப்பட்டது. இது எதிர்மின்னி அமைப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அதாவது எவ்வாறு எதிர்மின்னிகள் ஊட்கருவினைச் சுற்றி அமைகின்றன,  மற்றும் எதிர்மின்னிகளின் ஆற்றல்கள் அமைகின்றன என்பது போன்ற வினாக்களுக்கு விடை அளிக்க முடியவில்லை.

நீல்ஸ் போர் ( Niels Bohr) அணுமாதிரியின் கொள்கைகள் (1913)

ரதர்போர்ட்டின் கோள் மண்டல மாதிரியைத் தழுவி, ஆனால் மாற்றியமைக்கப்பட்ட அனுமாதிரியே நீல்ஸ் போரினுடையது. இதில்  குவாண்டம் கொள்கையை மையமாக வைத்து விளைவுகள் கூறப்பட்டது.

 1. நீல்ஸ் போர் அணுமாதிரிஉட்கருவைச் சுற்றி வட்டப்பாதைகள் அமைந்துள்ளன.  இவ் வட்டப்பாதையில் எதிர்மின்னிகள் உட்கருவைச் சுற்றிவருகின்றன. இப் பாதைகள் குறிப்பிட்ட ஆற்றல்களைப் பெற்றுள்ளதால் ஆற்றல் கூடுகள் அல்லது ஆற்றல் (சக்தி) மட்டங்கள் அல்லது குவாண்டம் மட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கருவுக்கு அண்மையில் உள்ள மட்டத்தில்  ஆற்றல் குறைந்திருக்கும், தொலைவில் ஆற்றல் உயர்ந்து இருக்கும்.
 2. ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மட்டத்தில் இருக்கும் எதிர்மின்னி ஆற்றலைப் பெறவோ அல்லது இழக்கவோ மாட்டாது. ஒரு ஆற்றல் மட்டத்தில் இருந்து வேறொரு மட்டத்துக்குத் தாவும்போது மட்டுமே அவை ஆற்றலை இழக்கவோ பெறவோ செய்கின்றன. அதிலும் அவ்வாற்றல் மட்டம் எதிர்மின்னிகளை ஏற்கக்கூடியதாக இருக்கவேண்டும். இதன்போது மின்காந்தக் கதிர்வீச்சு (போட்டோன்கள்) உறிஞ்சப்படும் அல்லது வெளித்தள்ளப்படும்.

ஆற்றல் மட்டம் E2இல் இருந்து E1க்கு எதிர்மின்னி பாய்கின்றது (E2 > E1) என்று வைத்துக்கொண்டால்,

h = பிளாங்கின் மாறிலி

ν = அதிர்வெண்

E= ஆற்றல்

சுருக்கமாக, ஓர் எதிர்மின்னி, ஓரு நிலையான நிறையில் இருந்து பிறிதொன்றிற்கு மாறினால்,எதிர்மின்னி குறிப்பிட்ட அதிர்வெண் உடைய கதிர்வீச்சை உறிஞ்சும் அல்லது வெளித்தள்ளும். இவ்வாறு பெறப்படும் நிறநிரல் (நிறமாலை) கோடுகள் ஆரம்ப,  இறுதி மட்டங்களைப் பொருத்து அமையும், ஓர் எதிர்மின்னி மீண்டும் குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு திரும்பினால் குறிப்பிட்ட ஆற்றலைக் கதிர்வீச்சாக வெளிப்படுத்தும்.

 1. ஒரு வட்டப் பாதையில் சுற்றும் எதிர்மின்னிகளின் கோண உந்தம் (அல்லது வளைவுந்தம் ) (angular momentum)

ஆகும்.

m = எதிர்மின்னியின் திணிவு

v = எதிர்மின்னியின் வேகம்

r=ஆரை

n = முதன்மைக் குவாண்டம் எண் (அல்லது தலைமைச்சத்திச்சொட்டெண்)

h = பிளாங்கின் மாறிலி (6.626E-34 J-s)

 

போரின் கூற்றுப்படி, h / 2π இன் மடங்குகள் (n = 1,2,3,4…) மூலம் பெறப்படும் கோண உந்தம் (mvr) பெறுமானம் கொண்ட வளைபாதைகள் மட்டுமே எதிர்மின்னிகளை ஏற்கக்கூடியது.

 

போர் அணு மாதிரியின் குறைபாடுகள்

 1. நீல்ஸ் போரின் கொள்கையின்படி, ஓர் எதிர்மின்னி ஓரு குறிப்பிட்ட ஆற்றல் மட்டத்தில் இருந்து மற்றொரு ஆற்றல் மட்டத்திற்குத் தாவுகின்ற பொழுது, கதிர்வீச்சு ஏற்படுகிறது. ஆனால் எவ்வாறு இக்கதிர்வீச்சு நிகழ்கிறது என்பதனை விளக்க முடியவில்லை.
 2.  ஐதரசன் நிற நிரலில் (நிறமாலை) காணும் நுண்ணிய கோடுகளை விளக்கத் தவறியது. இதற்குக் காரணம்,  அந்த காலகட்டத்தில் இதனை மட்டுமே உணர முடிந்தது. காலப்போக்கில், முன்னேறிய சாதனங்கள், மற்றும் அறிவியல் முறைகள் வளர்ச்சியடைதலால் முன்னர் அறிந்த கோடு என்பது ஓன்றுடன் ஓன்று நெருங்கி அமைந்த பல நுண்ணிய கோடுகளை உள்ளடக்கியது என்பது அறியப்பட்டது.
 3. அநேக கோடுகள் இருப்பது, பல ஆற்றல் மட்டங்கள் இருப்பதை புலப்படுத்துகின்றன. ஓவ்வொரு குவாண்டம் எண் ‘n’லும், இவை ஓன்றுடன் ஓன்று நெருங்கி அமைகின்றன. எனவே இவைகளின், கண்டுபிடிப்புகளால், புதிய குவாண்டம் எண்கள் தேவைப்படுகின்றன.
 4. ஐதரசன் அணு மற்றும் அதனைப் போன்று அமையும் அயனிகளின் (எ.கா. He+, Li2+, Be3+) நிற நிரலை வெற்றிகரமாக விளக்கினாலும்,  அதிக எண்ணிக்கையைப் பெற்றுள்ள எதிர்மின்னிகள் உடைய அணுக்களின் நிறநிரல் தொடர்களை விளக்க முடியவில்லை.
 5. h/2π என்ற மடங்கில் அமையும் mvr கோண உந்நத்தைப் பெறும் எதிர்மின்னி மட்டுமே, குறிப்பிட்ட வளையப் பாதையில் சுற்றும் என்ற கருத்திற்கு, திருப்தி அளிக்கும் உறுதிப்பாடு எதுவும் கிடையாது.
 6. ஓர் அணுவில் காணும் எலக்ட்ரான், உட்கருவில் இருந்து குறிப்பிட்ட தூரத்திலும்,  குறிப்பிட்ட வேகத்துடனும் சுற்றும் என நீல்ஸ் போர் கருதினார். அதாவது எலக்ட்ரான் ஓரு குறிப்பிட்ட உந்தத்தை பெற்றுள்ளது என்று பொருளாகும். ஆனால் இக்கொள்கை, ஹெய்சன்பெர்க் நிலையில்லா கோட்பாட்டிற்கு எதிராக அமைகிறது. இக்கொள்கையின்படி ஓரு துகளின், இருப்பிடம் மற்றும் உந்தத்தை ஓருசேர அறிய முடியாது.
 7. சீமன் விளைவு (Zeeman effect) பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை, ஓரு பொருள் (அணு) காந்த புலத்தில் வைக்கப்பட்டால் நிற நிரல் கோடுகள் மேலும் பல நெருங்கி அமைந்த கோடுகளாக பிளவுபடும். இந்த விளைவினைப் பற்றி போரின் கொள்கை எந்த விளக்கத்தையும் தர இயலவில்லை.
 8. ஸ்டார்க் விளைவினைப் பற்றி எந்த விளக்கமும் இல்லை. உமிழ் நிற நிரலைத் தரும் பொருள், வெளி மின்காந்த புலனுக்கு உட்படுத்தப்பட்டால், மேலும் அநேக நெருங்கி அமையும் கோடுகளாக பிளவுபடும், இதுவே ஸ்டார்க் விளைவாகும். போரின் கொள்கை, இவ்விளைவினை விளக்க முடியவில்லை.

சமதானிகளின் கண்டுபிடிப்பு

பிரடெரிக் சோடி (Frederick Soddy) என்பவர் மூலம் முதன்முதலில் சமதானிகள் இனங்காணப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தனிமம், வேறுபட்ட அணுத்திணிவு அல்லது திணிவெண்களைக் கொண்டதாக இருக்கலாம். அவ்வாறான வேறுபாடு ஒவ்வொன்றும்,  அத் தனிமத்தின் ஓரிடத்தான் அல்லது சமதானி (isotope) எனப்படும். தொம்சனின் நியோன் சோதனை ஒன்றில் வெவேறு திணிவுகளைக் கொண்ட நியோன் உள்ளது என அறிந்தார்.

இதற்கான விளக்கம் நொதுமிகளின் கண்டுபிடிப்புக்குப் பின்னர் தெளிவடைந்தது.

அணுக்கருத் துகள்களின் கண்டுபிடிப்பு

1917இல் ரதர்போர்ட் நைதரசன் வளிமத்தை அல்பாதுகளுடன் மோதியடிக்கவைத்தார், இதன்போது ஐதரசன் கரு வலிமைத்தில் இருந்து வெளித்தள்ளப்பட்டதை அவதானித்தார். இதை இலகுவில் அவரால் அவதானிக்க முடிந்தது, ஏனெனில் ஏற்கனவே ஐதரசன் வளிமத்தை அல்பாத்துகளுடன் ஏற்கனவே மோதவிட்டு வெளித்தள்ளப்பட்ட ஐதரசன் கருவை அவதானித்து இருந்தார். நைதரசன் அணுவில் இருந்து ஐதரசன் கரு வெளிவிடப்படுகின்றது எனும் முடிவுக்கு வந்தார் (உண்மையில் அவர் நைதரசனைப் பிளந்திருந்தார்.).

போர், மொசெலே, ரதர்போர்ட் ஆகியோர் ஒரு அணுவின் நேரேற்றம் எப்பொழுதும் ஐதரசன் கருவின் முழு எண்களாக அமையும் எனத் தெரிந்து வைத்திருந்தனர். இத்தகைய துகள்களை ரதர்போர்ட் புரோட்டன் என அழைத்தார். பெரும்பான்மை அணுக்களின் கருவின் திணிவு புரோட்டன் எண்ணிக்கையிலும் உயர்ந்ததாக இருப்பதைக் கண்டார், எனவே வேறு ஏதோ நடுநிலையான துகள்கள் உள்ளன (1920) எனக் கருதினார்.

1932இல் ஜேம்ஸ் சட்விக் என்பவர் அல்பாத்துகள்களை ஒரு மின்கணிப்பான் மீது வீழ்த்தி வாசிப்பொன்று பெறப்பட்டு, பின்னர் அல்பாத்துகள்களை வெளியிடும் பொருளுக்கும் மின்கணிப்பானுக்கும் இடையில் பெரிலியத் தகடு ஒன்றை வைத்தபோது மின்கணிப்பான் “0” காட்டியது. தகட்டுக்கும் மின்கணிப்பானுக்கும் இடையில் பரபின் மெழுகு வைக்கப்பட்டது; மீண்டும் மின்கணிப்பான் அளவொன்றைக் காட்டியது. அல்பாத்துகள் பெரிலியம் மீது மோதியபோது நியூத்திரன் (நொதுமி) வெளிப்பட்டதால் மின்கணிப்பான் “0” காட்டியது என விளக்கம் அளித்தார். “ஏதோ நடுநிலையான துகள்கள் “ என ரதர்போர்ட் கூறியதே இது என சட்விக் கூறினார். நொதுமியைக் கண்டறிந்த இவருக்கு நோபெல் பரிசு கிடைத்தது. வால்டர் போத் என்பவர் 1928இல் இதே சோதனையை மேற்கொண்டாராயினும் சோதனை விளைவை ‘நொதுமி’ எனக் கூறவில்லை.

குவாண்டம் இயற்பியல் அணுமாதிரி

லூயிஸ் டி புரோக்லி (Louis de Broglie ), 1924இல் அனைத்து அசையும் துகள்களும், குறிப்பாக எதிர்மின்னி போன்ற அணுத்துகள்கள், ஒரு வகையிலான அலையும் தன்மை கொண்டவை என தனது கருத்தை முன் வைத்தார். இக்கருத்தின் மீது ஈர்க்கப்பட்ட எர்வின் சுரோடிங்கர் (Erwin Schrödinger) அணுவின் உள்ளே உள்ள பொருள்களின் அலைப்பண்பின் இயக்கத்தை விளக்கும் ஓர் அடிப்படைச் சமன்பாடு ஒன்றை நிறுவினார். அணுக்கருவைச் சுற்றிவரும் எதிர்மின்னி போன்ற பொருட்களைப் பொதுவாக தனித் துகள்களாகக் காண்பது வழக்கம் என்றாலும், சில இடங்களில் துல்லியமாக விளக்க வேண்டுமென்றால் அவற்றை அலைகளாகக் கருதவேண்டும். மாக்ஸ் போர்ன் என்பவர் சுரோடிங்கரின் கூற்றுக்கு எதிராகக் கருதுகோள் ஒன்றை வெளியிட்டார். இறுதியில் இருவரது கருத்துக்களும் இணைந்து எதிர்மின்னி அலைவடிவமாகவும் துகள்களாகவும் உள்ளது என புதிய கோட்பாடு உருவானது.

இன்றையகால அணுமாதிரி பற்றி அதற்குரிய கட்டுரையில் காண்க.

 1.  குவாண்டம் எண்கள்
 2. ஆற்றல் மட்டங்களின் இலத்திரன் நிலைப்புத் தன்மை
 3. ஹூண்ட் விதி, பௌலியின் தவிர்ப்புத் தத்துவம், ஆஃபா தத்துவம்

உசாத்துணைகள்

காணொளிகள்

The short URL of the present article is: https://www.thamilkalvi.com/WLMXj

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

six + 5 =